மது அருந்த பணம் கொடுக்க மறுத்த தந்தையை கொன்ற மகன்
தாவணகெரேவில் குடிப்பதற்கு பணம் கொடுக்க மறுத்ததால் தலையில் கல்லைப்போட்டு விவசாயி படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவரது மகனை போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.
சிக்கமகளூரு:
குடிப்பழகத்திற்கு அடிமை
தாவணகெரே மாவட்டம் ஒன்னாளி தாலுகா பேலிமல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மஞ்சப்பா(வயது 62). விவசாயியான இவரது மகன் நரசிம்மப்பா(39). கூலி வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் நரசிம்மப்பா மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையானதாக கூறப்படுகிறது.
சில நேரங்களில் தந்தையிடம் குடிப்பதற்கு பணம் கேட்டு தொல்லை கொடுத்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு தந்தையிடம் சென்று மது குடிப்பதற்கு பணம் கேட்டார். அதற்கு தந்தை மறுப்பு தெரிவித்துள்ளார்.
தலையில் கல்லைப்போட்டு கொலை
இதில் ஆத்திரம் அடைந்த நரசிம்மா, தந்தையிடம் தகராறில் ஈடுபட்டார். அப்போது தந்தையை அடித்து, உதைத்து கீழே தள்ளிய அவர், தரையில் கிடந்த கல்லை எடுத்து மஞ்சப்பாவின் தலையில் போட்டார். இதில் பலத்த காயமடைந்த மஞ்சப்பா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதற்கிடையே சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர், மஞ்சப்பா ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் இதுபற்றி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற ஒன்னாளி போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் நரசிம்மப்பாவை கைது செய்த போலீசார், அவர் மீது வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story