கர்நாடகத்தில் வக்பு வாரியத்துக்கு தடையா?; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பதில்


கர்நாடகத்தில் வக்பு வாரியத்துக்கு தடையா?; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பதில்
x
தினத்தந்தி 10 April 2022 3:39 AM IST (Updated: 10 April 2022 3:39 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் வக்பு வாரியத்துக்கு தடை செய்யப்படுமா? என்பதற்கு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பதில் அளித்துள்ளார்.

பெங்களூரு:

வக்பு வாரியத்திற்கு தடை

  கர்நாடகத்தில் ஹிஜாப், ஹலால், இந்து கோவில்களில் முஸ்லிம் வியாபாரிகள் வியாபாரம் செய்யக்கூடாது, மசூதிகளில் ஒலிபெருக்கி விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. பெங்களூரு தர்மராயசாமி கோவிலில் நடைபெறும் கரக ஊர்வலம் மஸ்தான் ஷாப் தர்காவுக்கு செல்ல கூடாது என்று இந்து அமைப்புகளை சேர்ந்தவர்கள் கூறி வருகிறார்கள். சமூக வலைதளங்களில் இதுபற்றி கருத்து பதிவிட்டு வருகிறார்கள்.

  இந்த நிலையில், கர்நாடகத்தில் வக்பு வாரியத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று ஸ்ரீராமசேனை அமைப்பின் தலைவர் பிரமோத் முத்தாலிக் தெரிவித்திருந்தார். இதுபற்றி பீதரில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:-

அனைத்து தரப்பினரும் சமமானவர்கள்

  ஸ்ரீராமசேனையின் தலைவர் பிரமோத் முத்தாலிக் பேசி இருப்பது பற்றி எனக்கு எந்த தகவலும் வரவில்லை. நீங்கள் சொன்ன பிறகு தான், அதுபற்றி அறிந்து கொண்டேன். அவரவர் சம்பிரதாயத்தின்படி, அவரவர் நடந்து கொள்கிறார்கள். அரசு எப்போதும் சட்டத்தின்படியே செயல்படும். வக்பு வாரியத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று பிரசாரம் செய்யப்படும் விவகாரத்திற்கும், அரசுக்கும் எந்த விதமான சம்பந்தமும் இல்லை. இந்த விவகாரத்தில் அரசின் தலையீடு சிறிதும் இல்லை.

  அரசுக்கு முன்பாக அனைத்து தரப்பினரும் சமமானவர்கள். இதில், எந்த விதமான வேறுபாடும் பார்ப்பதில்லை. மாநிலத்தில் அமைதி நிலவ வேண்டும். மக்கள் அமைதியாக வாழ வேண்டும். மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு சரியாக இருக்க வேண்டும். சட்டம்-ஒழுங்கு எக்காரணத்தை கொண்டும் பாதிக்கப்பட கூடாது. இது மட்டுமே அரசின் நோக்கம். அந்த நோக்கத்தின்படியே அரசு பணியாற்றி வருகிறது.

ஆதாரங்களை வெளியிடுங்கள்

  காங்கிரஸ் தேசிய பொதுச் செயலாளர் ரனதீப்சிங் சுர்ஜிவாலா, பிட்காயின் விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். பிட்காயின் விவகாரம் குறித்து ஏற்கனவே நான் சட்டசபை கூட்டத்தொடரிலேயே பதில் அளித்து விட்டேன். பிட்காயின் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியினருக்கு இருக்கும் தகவல்களையும், ஆதாரங்களையும் வெளியிடட்டும். பிட்காயின் விவகாரம் குறித்து பேசும் காங்கிரஸ் தலைவர்கள் முதலில் ஆதாரங்களை வெளியிடுங்கள்.அதன்பிறகு, சம்பந்தப்பட்டவர்கள் மீது அரசு சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்.

  அதனை விட்டு விட்டு அரசியல் காரணங்களுக்கான டுவிட்டரில் பிட்காயின் குறித்து பதிவிடுவது, பத்திரிகையாளர்களிடம் பேசுவதை காங்கிரசார் நிறுத்த வேண்டும்.
  இவ்வாறு அவர் கூறினார்.


Next Story