காதலன் இறந்த துக்கத்தில் அனல்மின் நிலைய பெண் என்ஜினீயர் தற்கொலை


காதலன் இறந்த துக்கத்தில் அனல்மின் நிலைய பெண் என்ஜினீயர் தற்கொலை
x
தினத்தந்தி 10 April 2022 3:44 AM IST (Updated: 10 April 2022 3:44 AM IST)
t-max-icont-min-icon

ராய்ச்சூரில், காதலன் இறந்த துக்கத்தில் அனல்மின் நிலைய பெண் ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்து உள்ளது.

ராய்ச்சூர்:

தம்பதி தற்கொலை

  ராய்ச்சூர் டவுன் சக்திநகரில் அனல்மின் நிலையம் உள்ளது. இங்கு சோமநாத் என்பவர் என்ஜினீயராக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணம் முடிந்து வேதா என்ற மனைவி இருந்தார். இந்த நிலையில் அனல்மின் நிலையத்தில் என்ஜினீயராக வேலை செய்த ராய்ச்சூர் மாவட்டம் சிரவாரா தாலுகா குருபுரா கிராமத்தை சேர்ந்தவர் பார்வதி (வயது 24) என்பவருடன், சோமநாத்துக்கு பழக்கம் ஏற்பட்டது.

  இந்த பழக்கம் காதலாக மாறியது. பார்வதியும், சோமநாத்தும் உயிருக்கு, உயிராக காதலித்து வந்தனர். இந்த காதல் விவகாரம் வேதாவுக்கு தெரியவந்தது. இதனால் மனம் உடைந்த வேதா கடந்த ஜனவரி மாதம் 14-ந் தேதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மனைவி இறந்த அதிர்ச்சியில் அதே மாதம் 21-ந் தேதி சோமநாத்தும் தற்கொலை செய்து கொண்டார்.

பெண் ஊழியர் தற்கொலை

  சோமநாத் தற்கொலை செய்ததால் பார்வதி மனம் உடைந்து காணப்பட்டார். மேலும் அவர் விஷம் குடித்து தற்கொலைக்கும் முயன்றார். ஆனால் அவரை குடும்பத்தினர் காப்பாற்றி இருந்தனர். பின்னர் அனல்மின் நிலையத்தில் உள்ள குடியிருப்பில் பார்வதி தனது தாயுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் பார்வதியின் தாய் அருகேயுள்ள குருபுரா கிராமத்திற்கு சென்றிருந்தபோது, பார்வதி வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

  இது பற்றி சக்திநகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அவர்கள் சென்று பார்வதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் நடத்திய விசாரணையின் போது பார்வதி கைப்பட எழுதிய கடிதம் சிக்கியது. அதில் எனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை. யாரையும் குறை கூறவும் விரும்பவில்லை என்று எழுதி இருந்தார். இதுகுறித்து சக்திநகர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Next Story