வனப்பகுதியில் சுட்டெரிக்கும் வெயில்; தாகம் தணிக்க வெளியேறும் காட்டு யானைகள்


வனப்பகுதியில் சுட்டெரிக்கும் வெயில்; தாகம் தணிக்க வெளியேறும் காட்டு யானைகள்
x
தினத்தந்தி 10 April 2022 3:54 AM IST (Updated: 10 April 2022 3:54 AM IST)
t-max-icont-min-icon

சுட்டெரிக்கும் வெயில் காரணமாக வனப்பகுதியில் இருந்து தாகம் தணிக்க காட்டுயானைகள் வெளியேறி வருகின்றன. இதனால் வனப்பகுதியில் குட்டைகள் அமைத்து அதில் தண்ணீர் நிரப்ப சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பெங்களூரு:

கோடை வெயில்

  கர்நாடகத்தில் தற்போது கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. முன்எப்போதும் இல்லாத அளவுக்கு வெயிலின் உக்கிரம் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் மக்கள் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க குளிர்பானங்கள், குளிர்ச்சி தரக்கூடிய பழங்களை வாங்கி சாப்பிட்டு வருகிறார்கள். இந்த சுட்டெரிக்கும் வெயில் காரணமாக கர்நாடகத்தில் பல வனப்பகுதிகள் வறட்சியின் பிடியில் சிக்கியுள்ளன.

  இதனால் மரம், செடிகள் காய்ந்து போய் காணப்படுகின்றன. மேலும் மழை இல்லாததால் வனப்பகுதிகளில் ஓடும் சிற்றோடைகள், நீர்வீழ்ச்சிகளும் தண்ணீர் இன்றி காட்சி தருகின்றன. இதனால் உணவு, தண்ணீர் தேடி காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் கிராமங்களை நோக்கி படையெடுத்து வருகின்றன.

காட்டுயானைகள்

  அதுபோல் ஹாசன் மாவட்டம் சக்லேஷ்புரா தாலுகாவிலும் வனப்பகுதிகளில் வறட்சி நிலவுவதால் உணவு, தண்ணீர் தேடி கடந்த சில நாட்களாக காட்டு யானைகள் ஊருக்குள் படையெடுத்து வரும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது. அந்த வகையில் சக்லேஷ்புரா அருகே பைகெரே கிராமத்திற்கு நேற்று முன்தினம் 4 குட்டிகள் உள்பட 16 காட்டுயானைகள் திபுதிபுவென பூமி அதிரும் வகையில் வனப்பகுதியில் இருந்து வந்தன. அந்த யானைகள், அப்பகுதியில் உள்ள சிறிய குட்டையை நோக்கி விறுவிறு என சென்றன.

  பின்னர் குட்டையில் கிடந்த தண்ணீரை தாகம் தீர குடித்தன. பின்னர் அந்த குட்டையில் குளித்து கும்மாளமிட்ட யானைகள் நீண்ட நேரத்திற்கு பிறகு ஆடி, அசைந்தபடி வனப்பகுதிக்குள் சென்றன. காட்டு யானைகள் கஜபடை போல் ஊருக்குள் வந்து தண்ணீர் குடித்த காட்சிகளை அப்பகுதியை சேர்ந்த சிலர் செல்போனில் வீடியோவாக பதிவு செய்தனர்.

குட்டைகள் அமைத்து...

  தற்போது அந்த வீடியோ காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி காண்போரை கஜபடைகள் மிரளவைக்கின்றன. கோடை காலம் தொடங்கிவிட்டதால் வனப்பகுதியில் போதிய உணவு, தண்ணீர் கிடைக்காமல் காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் ஊருக்குள் நுழைவதாகவும், இதை தடுக்க வனப்பகுதிகளில் ஆங்காங்கே குட்டைகள் அமைத்து நீர் நிரப்ப வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கிராம மக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  மாநிலம் முழுவதும் உள்ள வனப்பகுதிகளில் கோடை காலத்தை கருத்தில் கொண்டு வனவிலங்குகளுக்கு தண்ணீர் தாகத்தை தீர்க்க குட்டைகளை அமைக்க கர்நாடக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
1 More update

Next Story