மலைப்பாதையில் தடுப்பு சுவரில் மோதி நின்ற அரசு பஸ்
மலைப்பாதையில் தடுப்பு சுவரில் மோதி அரசு பஸ் நின்றது.
பெரும்பாறை:
கொடைக்கானல் கீழ்மலையான ஆடலூரில் இருந்து வத்தலக்குண்டுவுக்கு மலைப்பாதையில் இன்று காலை ஒரு அரசு பஸ் புறப்பட்டது. இதில் 53 பயணிகள் இருந்தனர். பெரும்பாறை அருகே தடியன்குடிசை-கருப்புசாமி கோவில் இடையே 8-வது வளைவு பகுதியில் பஸ் வந்தது. அப்போது பஸ் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. இதையடுத்து டிரைவர் ‘பிரேக்’ பிடித்து பஸ்சை கட்டுப்படுத்த முயன்றார். எனினும் பஸ் நிற்காமல் மலைப்பாதையில் இருந்த தடுப்பு சுவரில் மோதி நின்றது.
தடுப்பு சுவருக்கு பின்னால் பெரிய பள்ளம் உள்ளது. அதிர்ஷ்டவசமாக டிரைவரின் சாமர்த்தியத்தால் தடுப்பு சுவரில் மோதி பஸ் நின்றதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதனால் டிரைவர், கண்டக்டர் மற்றும் பயணிகள் காயமின்றி உயிர் தப்பினர்.
இந்தநிலையில் பஸ் பழுதானதால் வத்தலக்குண்டுவுக்கு டிக்கெட் எடுத்த பயணிகள் கண்டக்டரிடம் பணத்தை திருப்பி கேட்டனர். இதற்கு அவர் மறுப்பு தெரிவித்தார். இதனால் அங்கு வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, பயணிகளிடம் பணத்தை திருப்பி தர எனக்கு அதிகாரம் இல்லை என்றும், வேறு பஸ்சில் பயணிகளை ஏற்றி விடலாம் என்றும் கண்டக்டர் தெரிவித்தார். இதையடுத்து பயணிகள் அந்த வழியாக வாகனங்களில் வந்தவர்களிடம் ‘லிப்ட்’ கேட்டு வத்தலக்குண்டுவுக்கு சென்றனர்.
Related Tags :
Next Story