சமரச மையத்தில் தீர்வு காணும் வழக்குகளுக்கு மேல்முறையீடு கிடையாது: தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிபதி சுமதி


சமரச மையத்தில் தீர்வு காணும் வழக்குகளுக்கு மேல்முறையீடு கிடையாது: தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிபதி சுமதி
x
தினத்தந்தி 10 April 2022 6:47 PM IST (Updated: 10 April 2022 6:47 PM IST)
t-max-icont-min-icon

“சமரச மையத்தில் தீர்வு காணும் வழக்குகளுக்கு மேல்முறையீடு கிடையாது” என்று தூத்துக்குடி மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிபதி சுமதி கூறினார்.

தூத்துக்குடி:
“சமரச மையத்தில் தீர்வு காணும் வழக்குகளுக்கு மேல்முறையீடு கிடையாது” என்று தூத்துக்குடி மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிபதி சுமதி கூறினார். 
விழிப்புணா்வு நிகழ்ச்சி
தூத்துக்குடி மாவட்ட நீதிமன்ற சமரச மையத்தில் சமரச மைய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், வருவாய் அலுவலர் கண்ணபிரான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியினை மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிபதி சுமதி தலைமை தாங்கி, தொடங்கி வைத்து பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
நமது நீதிமன்றங்களில் சமரச மையங்கள் செயல்பட்டு வருகின்றது. நீங்கள் நீதிமன்றத்தில் நேரடியாகவோ அல்லது வழக்கறிஞர் மூலமாகவோ ஆஜராகும்போது உங்கள் வழக்கை சமரச மையத்திற்கு அனுப்பக்கூறலாம். சமரச மையத்தில் நீங்களே எதிர்தரப்புடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தலாம். இதில் உங்கள் வழக்கறிஞர்கள் பங்குகொண்டு உங்களுக்கு உதவலாம். பயிற்சி பெற்ற சமரசர்கள் உங்களது சமரச பேச்சுவார்த்தைக்கு ஏதுவாக வழிகாட்டுவார்கள்.
மேல்முறையீடு 
சமரச மையத்தில் நடைபெறும் அனைத்து பேச்சுவார்த்தைகளும் ரகசியம் காக்கப்படும். அது உங்கள் வழக்கை எந்த வகையிலும் பாதிக்காது. சமரசத்தில் உங்கள் பிரச்சினையை நீங்களே கையாண்டு உங்களுக்கு உகந்த உங்களால் ஒப்புக்கொள்ளப்படுகின்ற தீர்வுகளை எட்டலாம். சமரச வழக்குகளில் எவ்வித மேல்முறையீடு இல்லாமலும், விரைவாகவும், இறுதியாகவும், கட்டணம் ஏதுமின்றி சுமூக தீர்வு காணமுடியும். சமரசத்தின் மூலம் உங்கள் வழக்கு சுமூகமாக தீர்க்கப்பட்டால் நீதிமன்ற கட்டணத்தை உங்களுக்கே திரும்ப ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவிடும். சமரசம் ஏற்படவில்லையென்றால் நீங்கள் உங்கள் வாதத்தை நீதிமன்றத்தின் முன்தொடரலாம்.
சமரசத்திற்கு தனிநபர் தகராறு, பணவசூல் தகராறு, குடும்ப தகராறு, சொத்து தகராறு, வாடகை தகராறு, காசோலை தகராறு, மின்சார வாரியம், தொழிலாளர் நலம், உரிமையியல் மற்றும் இதர வழக்குகள் உகந்த வழக்குகள் ஆகும். சமரச மையத்தில் நடைபெறும் அனைத்து பேச்சுவார்த்தைகளும், எவ்வகையிலும் பதிவு செய்யப்படாது.  இருதரப்பினருக்கும் வெற்றி என்ற நிலை உருவாகும். சமரச மையத்தில் காணப்படும் தீர்வே இறுதியானது. இதற்கு மேல்முறையீடு கிடையாது.
தொலைபேசி எண்
தூத்துக்குடி மாவட்டத்தில் சமரச மையத்திற்கு 5 சீனியர் வழக்கறிஞர்களுக்கு பயிற்சி அளிக்கிறோம். பொதுமக்களுக்கும், மாணவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த பேரணி நடத்தப்படுகிறது. மேலும் இதுகுறித்த விவரங்களுக்கு பொதுமக்கள், உயர்நீதிமன்றம் மற்றும் மாவட்ட நீதிமன்றங்களில் உள்ள சமரச மையத்தை நேரடியாகவும், 0461 - 2323094 என்ற தொலைபேசி எண்ணிலும், dmccthoothukudi@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.
இவ்வாறு அவர் கூறினார். 
அதனைத்தொடர்ந்து மாவட்ட நீதிமன்ற வளாகத்தில், சமரச மைய விழிப்புணர்வு பேரணியினை நீதிபதி தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி அனில்குமார், சிறப்பு நீதிபதி (போக்சோ சட்ட வழக்குகள்) பாண்டியராஜ் மற்றும் நீதிபதிகள், வழக்கறிஞர்கள், பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story