வேலூரில் அரசு பஸ் டிரைவரை தாக்கியவர்கள் பணிபுரிந்த டீ, குளிர்பான கடைக்கு ‘சீல்' வைப்பு


வேலூரில் அரசு பஸ் டிரைவரை தாக்கியவர்கள் பணிபுரிந்த டீ, குளிர்பான கடைக்கு ‘சீல் வைப்பு
x
தினத்தந்தி 10 April 2022 7:20 PM IST (Updated: 10 April 2022 7:20 PM IST)
t-max-icont-min-icon

வேலூரில் அரசு பஸ் டிரைவரை தாக்கியவர்கள் பணிபுரிந்த டீ, குளிர்பான கடைக்கு கலெக்டர் உத்தரவின்பேரில் ‘சீல்' வைக்கப்பட்டது.

வேலூர்

வேலூரில் அரசு பஸ் டிரைவரை தாக்கியவர்கள் பணிபுரிந்த டீ, குளிர்பான கடைக்கு கலெக்டர் உத்தரவின்பேரில் ‘சீல்' வைக்கப்பட்டது.

டிரைவர் மீது தாக்குதல்

சென்னை அம்பத்தூரில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு பஸ்  வேலூர் புதிய பஸ்நிலையத்துக்கு வந்தது. பஸ்சை திருவண்ணாமலை மாவட்டம் வண்ணாங்குளம் அருகே உள்ள பெரிய அய்யம்பாளையம் கிராமத்தை சேர்ந்த செல்வம் (வயது 49) ஓட்டி வந்தார். பஸ்நிலைய நுழைவு வாயிலில் பஸ்கள் வரிசையாக நின்று கொண்டிருந்தன. டிரைவர் செல்வம் ஹாரன் அடித்தபடி பஸ்நிலையத்தின் உள்ளே செல்ல முயன்றார்.

இதற்கு அந்த பகுதியில் உள்ள டீ, குளிர்பானம் விற்பனை கடையில் பணிபுரிந்த 2 தொழிலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து, டிரைவரை ஆபாச வார்த்தைகளால் திட்டினர். சிறிதுநேரத்தில் செல்வம் மீண்டும் ஹாரன் அடித்தபடி பஸ்நிலையத்துக்குள் பஸ்சை ஓட்டி சென்றார். இதனால் ஆத்திரம் அடைந்த 2 பேரும் பஸ்நிலையம் சென்று கை மற்றும் சாவியால் டிரைவர் செல்வத்தை சராமரியாக தாக்கினர். இதில், அவரின் தலையில் பலத்த அடிபட்டு ரத்தம் கொட்டியது.

கடைக்கு சீல் வைப்பு

இதனை கண்டித்தும், டிரைவர் செல்வத்தை தாக்கிய 2 பேரை கைது செய்யக்கோரியும் அரசு பஸ் டிரைவர், கண்டக்டர்கள் பஸ்களை இயக்காமல் பஸ்நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார், போக்குவரத்துக்கழக அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் சமாதானம் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து டிரைவர் செல்வம் சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுதொடர்பாக வேலூர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் வழக்குப்பதிந்து டிரைவரை தாக்கி தப்பியோடிய வேலூர் ஓல்டுடவுனை சேர்ந்த 2 பேரையும் தீவிரமாக தேடி வருகிறார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல்பாண்டியன் அந்த கடைக்கு ‘சீல்' வைக்கும்படி வருவாய்த்துறையினருக்கு உத்தரவிட்டார்.

 அதன்பேரில் வேலூர் தாசில்தார் செந்தில் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள்  அந்த கடையை பூட்டி ‘சீல்' வைத்தனர். மேலும் அந்த கடைக்கு ‘சீல்' வைக்கப்பட்டது குறித்து அறிவிப்பு நோட்டீசும் கடையின் முன்பகுதியில் ஒட்டப்பட்டது.

Next Story