உளுந்து பயிருக்கு ரூ 85 கோடி பயிர் காப்பீட்டுத் தொகை விடுவிப்பு: கலெக்டர் செந்தில்ராஜ்
தூத்துக்குடி மாவட்டத்தில் உளுந்து பயிருக்கு ரூ.85 கோடி பயிர் காப்பீட்டுத் தொகை விடுவிக்கப்பட்டு உள்ளதாக, கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் உளுந்து பயிருக்கு ரூ.85 கோடி பயிர் காப்பீட்டுத் தொகை விடுவிக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
காப்பீட்டு தொகை
2020-21-ம் ஆண்டு பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் ராபிபருவத்தில் உளுந்து, பாசிப்பயறு, மக்காச்சோளம், சோளம், கம்பு, பருத்தி, சூரியகாந்தி, எள், நிலக்கடலை மற்றும் நெல் பயிர்களுக்கு 1 லட்சத்து 39 ஆயிரத்து 206 எக்டடேருக்கு விவசாயிகள் காப்பீடு பதிவு செய்து இருந்தனர். இதில் மக்காச்சோளம் 45 ஆயிரத்து 437 எக்டேரிலும், உளுந்து 54 ஆயிரத்து 897 எக்டேரிலும், இதர பயிர்கள் 39 ஆயிரத்து 173 எக்டேரிலும் காப்பீடு செய்யப்பட்டது. பருவம் தவறிய மழையால் பயிர்கள் பாதிக்கப்பட்டதால் விவசாயிகளுக்கு ஏற்பட்ட இழப்பை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் மற்றும் வேளாண்மை துறையின் நடவடிக்கை காரணமாக உளுந்து பயிருக்கு 95 ஆயிரத்து 852 விவசாயிகளுக்கு ரூ.85 கோடியே 21 லட்சத்து 90 ஆயிரம்காப்பீட்டு தொகை விடுவிக்கப்பட்டு உள்ளது. இந்த தொகை நேரடியாக விவசாயிகளின் வங்கிகணக்கில் வரவு வைக்கப்பட்டு உள்ளது.
ரூ.105 கோடி
இந்த தொகை இந்த பருவத்தில் தமிழகத்தில் எந்த ஒரு மாவட்டத்துக்கும் விடுவிக்கப்பட்ட தொகையைக் காட்டிலும் மிகவும் அதிகம் ஆகும். மேலும் ஏற்கனவே மக்காச்சோளம் பயிருக்கான காப்பீட்டுத் தொகை ரூ.20 கோடியே 45 லட்சம் விடுவிக்கப்பட்டு உள்ளது. இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை விவசாயிகளுக்கு மொத்தம் ரூ.105 கோடியே 67 லட்சம் விடுவிக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
Related Tags :
Next Story