திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமிகோவிலில் திருநீறு தயாரிக்கும் திட்டம்தொடக்கம்


திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமிகோவிலில் திருநீறு தயாரிக்கும் திட்டம்தொடக்கம்
x
தினத்தந்தி 10 April 2022 8:04 PM IST (Updated: 10 April 2022 8:04 PM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் திருநீறு தயாரிக்கும் திட்டத்தை அமைச்சர் சேகர்பாபு காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் திருநீறு தயாரிக்கும் திட்டத்தை அமைச்சர் சேகர்பாபு காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.
அமைச்சர் தொடங்கி வைத்தார்
தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் பக்தர்களுக்கு தரமான திருநீறு, குங்கும பிரசாதம் வழங்க வேண்டும் என்பதற்காக பழனி பாலதண்டாயுதபாணி கோவில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்பட 4 கோவில்களில் தரமான திருநீர் தயாரிக்கவும், அதேபோல் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில், சமயபுரம் மாரியம்மன் கோவில் உள்பட 4 கோவில்களில் தரமான குங்குமம் தயாரிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது.
இதற்கான திட்டத்தை நேற்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் கீழ் தரமான முறையில் தயாரிக்கப்படும் திருநீறு, குங்குமம் பிரசாதங்கள் அந்தந்த கோவில் பகுதிகளை சுற்றியுள்ள அனைத்து கோவில்களுக்கும் வழங்கப்படும்.
திருநீறு தயாரிப்பு கூடம்
இதையொட்டி திருச்செந்தூரில் நடந்த நிகழ்ச்சியில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தயாரிக்கப்பட்ட பசுஞ்சாண பால் மூலிகை திருநீற்றை முதற்கட்டமாக குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலுக்கும், செட்டியாபத்து சிதம்பரேஸ்வரர் கோவிலுக்கும், தேரிகுடியிருப்பு கற்குவேல் அய்யனார் கோவிலுக்கும் கோவில் இணை ஆணையர் (பொறுப்பு) குமரதுரை வழங்கினார். 
பின்னர், கோவில் வளாகத்தில் திருநீறு தயாரிப்பு கூடத்தை தூத்துக்குடி மண்டல இணை ஆணையர் அன்புமணி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
கலந்து கொண்டவர்கள்
நிகழ்ச்சியில், கோவில் தக்கார் பிரதிநிதியும், ஓய்வுபெற்ற கால்நடைத்துறை உதவி இயக்குனருமான பாலசுப்பிரமணிய ஆதித்தன், கோவில் உதவி ஆணையர் வெங்கடேஷ், அலுவலக கண்காணிப்பாளர் ரவீந்திரன், குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் செயல் அலுவலர் ராமசுப்பிரமணியன்,செட்டியாபத்து சிதம்பரேஸ்வரர் கோவில் செயல் அலுவலர் பாலமுருகன், தேரிக்குடியிருப்பு கற்குவேல் அய்யனார் கோவில் செயல் அலுவலர் காந்திமதி, பழனி ஆதிமூலம் விபூதி சித்தர் மற்றும் கோவில் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Next Story