பெங்களூரு மாநகராட்சிக்கு எப்போது தேர்தல்?


பெங்களூரு மாநகராட்சிக்கு எப்போது தேர்தல்?
x
தினத்தந்தி 10 April 2022 2:56 PM (Updated: 10 April 2022 2:56 PM)
t-max-icont-min-icon

பெங்களூரு மாநகராட்சிக்கு எப்போது தேர்தல் நடைபெறும் என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது.

பெங்களூரு:

வார்டு மறுவரையறை பணிகள்

  பெங்களூரு மாநகராட்சி மன்றத்தின் பதவி காலம் முடிவடைந்து சுமார் 2 ஆண்டுகள் ஆகிறது. மாநகராட்சிக்கு தேர்தல் நடத்தப்படாத காரணத்தால் நிர்வாக அதிகாரி நியமிக்கப்பட்டார். பெங்களூரு மாநகராட்சிக்கு தனி சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதனால் மாநகராட்சியில் தற்போது உள்ள வார்டுகளின் எண்ணிக்கை 198-ல் இருந்து 243 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

  வார்டு மறுவரை பணிகளை மேற்கொள்ள மாநகராட்சி தலைமை கமிஷனர் கவுரவ் குப்தா தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழு வார்டு மறுவரையறை பணிகளை நிறைவு செய்துள்ளன. வார்டு மறுவரையறை அறிக்கைக்கு இறுதி வடிவம் கொடுக்கும் பணியில் தலைமை கமிஷனர் கவுரவ் குப்தா ஈடுபட்டுள்ளார்.

இட ஒதுக்கீடு

  இதற்கிடையே உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தல்களில் பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கு இட ஒதுக்கீடு கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது. இட ஒதுக்கீடு வழங்க வேண்டுமென்றால் சில அளவுகோலை பின்பற்ற வேண்டும் என்றும் அந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் மாநகராட்சி தேர்தலை நடத்தினால் பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க முடியாத நிலை உள்ளது.

  மேலும் தற்போது வார்டு மறுவரையறை பணிகள் 2011-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு அறிக்கையின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வருகிற ஜூன் மாதம் புதிய மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிகள் நடைபெற உள்ளன. இந்த சூழ்நிலையில் பெங்களூரு மாநகராட்சிக்கு தற்போது தேர்தல் நடத்தும் மனநிலையில் அரசு இல்லை என்றே சொல்லப்படுகிறது.

காத்திருக்க வேண்டும்

  பெங்களூரு நகரை சேர்ந்த எம்.எல்.ஏ.க்களும், மாநகராட்சி தேர்தல் நடைபெறுவதற்கு ஆதரவாக இல்லை என்றே கூறப்படுகிறது. புதிய மக்கள்தொகை கணக்கெடுப்பு அறிக்கை வெளியானால் மீண்டும் ஒருமுறை வார்டு மறுவரையறை பணிகள் நடைபெற வேண்டும். அதனால் பெங்களூரு மாநகராட்சிக்கு தற்போது தேர்தல் நடைபெற வாய்ப்பு இல்லை என்றே சொல்லப்படுகிறது.

  அடுத்த ஆண்டு(2023) கர்நாடக சட்டசபை தேர்தல் நடக்கிறது. அந்த தேர்தல் முடிவடைந்த பிறகே பெங்களூரு மாநகராட்சிக்கு தேர்தல் நடைபெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது. அதனால் மாநகராட்சி தேர்தல் நடைபெற இன்னும் ஓராண்டுக்கு மேல் காத்திருக்க வேண்டும். அதுவரை மாநகராட்சியில் அதிகாரிகளின் ஆட்சி தான் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story