ராம நவமியையொட்டி கிருஷ்ணர், ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு பூஜை
ராம நவமியையொட்டி கிருஷ்ணர், ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது.
திண்டுக்கல்:
திண்டுக்கல், திருச்சி சாலை கே.ஆர்.நகரில் ரூப கிருஷ்ணன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ராமநவமியையொட்டி இன்று சிறப்பு பூஜை நடைபெற்றது. அப்போது நாராயண சுதர்சன ஹோம யாகம் நடந்தது. பின்னர் ரூப கிருஷ்ணனுக்கு பாலபிஷேகம் மற்றும் தயிர், திருமஞ்சனம், சந்தனம், பச்சரிசி, இளநீர் உள்பட 16 வகை அபிஷேகம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து சுவாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
வேடசந்தூர் அருகே சேணன்கோட்டையில் உள்ள ராம பக்த ஆஞ்சநேயர் கோவிலில் ராமநவமி உற்சவ விழா நடந்தது. அதையொட்டி காலையில் விஸ்வரூப தரிசனத்தை தொடர்ந்து சீதா, லட்சுமணன், அனுமன் சமேத கல்யாணராமருக்கு அலங்காரம் திருமஞ்சனம் மற்றும் சிறப்பு யாகம் நடந்தது. இதனைத்தொடர்ந்து மூலவர் ஆஞ்சநேயருக்கு ராஜ அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. பின்னர் 51 அடி உயரமுள்ள விஸ்வரூப ராமபக்த ஆஞ்சநேயர் சிலைக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. இந்தநிகழ்ச்சியில் வேடசந்தூர், திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
இதேபோல் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணர், ஆஞ்சநேயர் கோவில்களில் ராமநவமியையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது.
Related Tags :
Next Story