மின்சாரம் தாக்கி வாலிபர் பலி; பேனர் கட்ட முயன்றபோது சம்பவம்


மின்சாரம் தாக்கி வாலிபர் பலி; பேனர் கட்ட முயன்றபோது சம்பவம்
x

பேனர் கட்ட முயன்றபோது வாலிபர் மின்சாரம் தாக்கி பலியானார்.

ஹாவேரி:

ஹாவேரி மாவட்டம் சிக்காம் தாலுகா கியாலகொண்டா கிராமத்தைச் சேர்ந்தவர் ஹரீஷ் மகேஷ் கம்மார்(வயது 18). இவர் உள்பட கிராமத்தைச் சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் கிராமத்தில் நடந்த ருவிழாவையொட்டி பேனர்கள் கட்ட முடிவு செய்தனர். அதற்காக அவர்கள் பல இடங்களில் பேனர்கள் கட்டினர். பின்னர் 35 அடி உயர ஒரு பேனரை கட்ட அப்பகுதியில் உள்ள செல்போன் கோபுரத்தில் ஏற முயன்றனர். இந்த சந்தர்ப்பத்தில் ஹரீஷ் மற்றும் முகமது கைப் இம்தியாஸ் முல்லா என்ற வாலிபரும் சேர்ந்து செல்போன் கோபுரத்தில் ஏறி பேனரை கட்ட முயன்றனர். 

அப்போது எதிர்பாராத விதமாக கால் தவறி அவ்வழியாக சென்ற மின்கம்பி மீது மிதித்து விட்டார். இதில் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட ஹரீஷ் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். அதேபோல் மின்சாரம் தாக்கி முகமது படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து ஹாவேரி புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

Next Story