சேனா பவன் வெளியே ஒலிப்பெருக்கியில் அனுமன் பாடல்- எம்.என்.எஸ். தொண்டர்கள் 4 பேர் கைது
தாதரில் உள்ள சேனா பவன் வெளியே ஒலிப்பெருக்கியில் அனுமன் பாடலை ஒலிக்க செய்த எம்.என்.எஸ். தொண்டர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மும்பை,
தாதரில் உள்ள சேனா பவன் வெளியே ஒலிப்பெருக்கியில் அனுமன் பாடலை ஒலிக்க செய்த எம்.என்.எஸ். தொண்டர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ராஜ் தாக்கரே எச்சரிக்கை
நவநிர்மாண் சேனா (எம்.என்.எஸ்.) தலைவர் ராஜ் தாக்கரே சமீபத்தில் நடந்த குடிபட்வா பொதுக்கூட்டத்தில் மசூதிகளில் அதிக சத்தத்தை எழுப்பும் ஒலிப்பெருக்கிகளை பயன்படுத்துவதை தடுக்க வேண்டும் என்றார். மேலும் இதை அரசு தடுக்காவிட்டால், நவநிர்மாண் சேனாவினர் ஒலிப்பெருக்கிகளில் அனுமன் பாடல்களை ஒலிக்க செய்வார்கள் என எச்சரித்து இருந்தார்.
இந்த பேச்சை அடுத்து நகரில் ஒரு சில இடங்களில் நவநிர்மாண் சேனா தொண்டர்கள் பொது இடத்தில் ஒலிப்பெருக்கிகளை வைத்து அனுமன் பாடல்களை ஒலிக்க செய்த சம்பவங்கள் நடந்தன.
சேனா பவன் அருகில்...
இந்தநிலையில் இன்று காலை தாதரில் உள்ள சேனா பவன் அருகில் சில எம்.என்.எஸ். தொண்டர்கள் டாக்சியில் ஒலிப்பெருக்கிகளை கட்டி அனுமன் பாடல்களை ஒலிக்க செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற சிவாஜி பார்க் போலீசார் பொது இடத்தில் அனுமதி இன்றி ஒலிப்பெருக்கியை பயன்படுத்திய எம்.என்.எஸ். தொண்டர்கள் 4 பேரை கைது செய்து அழைத்து சென்றனர்.
மேலும் அவர்களின் டாக்சி, ஒலிப்பெருக்கிகளையும் பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து போலீஸ் நிலையம் அருகில் உள்ள சிறிய கோவில் முன் எம்.என்.எஸ். தொண்டர்கள் திரண்டனர். அவர்கள் பக்தி பாடல்களை பாடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story