திருவாரூர் மாவட்டத்தில் வெயிலின் தாக்கத்தை தணித்த மழை


திருவாரூர் மாவட்டத்தில் வெயிலின் தாக்கத்தை தணித்த மழை
x
தினத்தந்தி 10 April 2022 9:23 PM IST (Updated: 10 April 2022 9:23 PM IST)
t-max-icont-min-icon

திருவாரூர் மாவட்டத்தில் வெயிலின் தாக்கத்தை தணிக்கும் வகையில் பரவலாக மழை பெய்தது. இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

திருவாரூர்:
திருவாரூர் மாவட்டத்தில்  வெயிலின் தாக்கத்தை தணிக்கும் வகையில் பரவலாக மழை பெய்தது. இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
வெப்பச்சலனம்
கோடைக்காலம் தொடங்கி உள்ள நிலையில் வெயில் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. வெயில் உஷ்ணத்தால் மக்கள் வியர்வையில் நனைந்து அவதியடைந்து வந்தனர். வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் முழுவதும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
அதன்படி நேற்று முன்தினம் இரவு இடியுடன் மழை பெய்தது. நேற்று காலை மழை விட்டு வெயில் அடித்த நிலையில் 11 மணி முதல்  மழை பெய்தது.  இருந்தபோதிலும் வாட்டி வதைத்த வெயிலுக்கு குளுமை சேர்க்கும் வகையில் பெய்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
கூத்தாநல்லூரில் பலத்த மழை
கூத்தாநல்லூர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக  வெயில் சுட்டெரித்து வந்தது. இந்த நிலையில் நேற்று அதிகாலை 5 மணி அளவில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் சாரல் மழை பெய்தது. 
இதை தொடர்ந்து வழக்கம் போல் வெயில் அடித்த நிலையில் மதியம் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் தாழ்வான இடங்களில் குளம் போல் மழைநீர் தேங்கி நின்றது.
வெப்பம் தணிந்தது
இதேபோல கூத்தாநல்லூர், லெட்சுமாங்குடி, பொதக்குடி, பூதமங்கலம், தண்ணீர்குன்னம், வடபாதிமங்கலம், ஓகைப்பேரையூர், ராமநாதபுரம், திருராமேஸ்வரம், கோரையாறு, ஓவர்ச்சேரி, குடிதாங்கிச்சேரி, குலமாணிக்கம், நாகங்குடி, பழையனூர், அதங்குடி, வெள்ளக்குடி, விழல்கோட்டகம், பழையனூர், நாகங்குடி, பண்டுதக்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மழை பெய்தது. 
இந்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழ்நிலை நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். 
மன்னார்குடி
இதேபோல மன்னார்குடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று காலை முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. மதியம் சாரல் மழை பெய்தது. இந்த மழை ½ மணி நேரத்திற்கும் மேலாக பெய்தது. தொடர்ந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. 
அவ்வப்போது சாரல் மழை பெய்தது.  மன்னார்குடி, சவளக்காரன், அஷேசம், பாமணி, சேரங்குளம், பரவாக்கோட்டை, உள்ளிக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்தது.  
திருமக்கோட்டை
திருமக்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள மேலநத்தம், பெருமாள் கோவில் நத்தம், வல்லூர், தச்சன்வயல், ராதாநரசிம்மபுரம், ராஜகோபாலபுரம், கோவிந்த நத்தம், தென்பரை, பாளையக்கோட்டை, கன்னியாக்குறிச்சி, எளவனூர் ஆகிய ஊர்களில்  பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இந்த மழை கோடை விவசாயத்திற்கு ஏற்றது என விவசாயிகள் கூறினர்.
---


Next Story