கடலில் மூழ்கி அக்காள்-தங்கை பலி; தாத்தாவுக்கு திதி கொடுக்க சென்றபோது பரிதாபம்
மங்களூருவில், கடலில் மூழ்கி அக்காள்-தங்கை பலியானார்கள். தாத்தாவுக்கு திதி கொடுக்க சென்றபோது பரிதாபம் நடந்துள்ளது
மங்களூரு: மங்களூருவில், கடலில் மூழ்கி அக்காள்-தங்கை பலியானார்கள். தாத்தாவுக்கு திதி கொடுக்க சென்றபோது பரிதாபம் நடந்துள்ளது.
திதி கொடுக்க சென்றபோது...
தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு டவுன் சக்தி நகர் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ். இவரது மகள்கள் வைஷ்ணவி (வயது 21), திரிஷா(17). கடந்த சில நாட்களுக்கு முன்பு வெங்கடேசின் தந்தை இறந்தார். இந்த நிலையில் இறந்த தந்தைக்கு திதி கொடுக்க வெங்கடேஷ், தனது மகள்களான வைஷ்ணவி, திரிஷாவுடன் சூரத்கல் கடற்கரைக்கு சென்றார்.
அங்கு அவர்கள் 3 பேரும் திதி கொடுத்தனர். இதையடுத்து கடலில் குளித்தனர்.
அப்போது கடலில் ராட்சத அலையில் வெங்கடேஷ், அவரது மகள்கள் சிக்கி அடித்து செல்லப்பட்டனர். இதனால் அவர்கள் 3 பேரும் கடலில் மூழ்கி உயிருக்கு போராடினர்.
அக்காள்-தங்கை சாவு
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதியினர் சூரத்கல் போலீசார், தீயணைப்பு படையினருக்கு உடனடியாக தகவல் கொடுத்தனர். அதன்பேரில் உடனடியாக விரைந்து வந்த தீயணைப்பு படையினர், கடலில் மூழ்கி தத்தளித்த வெங்கடேஷ், அவரது மகள்கள் வைஷ்ணவி, திரிஷா ஆகிய 3 பேரை மீட்டு சிகிச்சைக்காக அருகே உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே அக்காள்-தங்கையான வைஷ்ணவி, திரிஷா பரிதாபமாக உயிரிழந்தனர். வெங்கடேஷ் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். விசாரணையில், தாத்தாவுக்கு திதி கொடுக்க வந்தபோது கடலில் மூழ்கி வைஷ்ணவி, திரிஷா உயிரிழந்தது தெரியவந்தது. இதுகுறித்து சூரத்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story