தலித் என்பதால் மறுப்பு: தாசில்தார் முன்னிலையில் முதியவருக்கு முடி திருத்தம் செய்த சலூன் கடைக்காரர்


தலித் என்பதால் மறுப்பு: தாசில்தார் முன்னிலையில் முதியவருக்கு முடி திருத்தம் செய்த சலூன் கடைக்காரர்
x
தினத்தந்தி 10 April 2022 9:58 PM IST (Updated: 10 April 2022 9:58 PM IST)
t-max-icont-min-icon

செல்லக்கெரே அருேக தலித் என்பதால் முடித்திருத்தம் செய்ய மறுத்ததை அறிந்த தாசில்தார் தனது முன்னிலையில் முதியவருக்கு, சலூன் கடைக்காரரை முடி திருத்தம் செய்ய வைத்த சம்பவம் நடந்துள்ளது

சிக்கமகளூரு: செல்லக்கெரே அருேக தலித் என்பதால் முடித்திருத்தம் செய்ய மறுத்ததை அறிந்த தாசில்தார் தனது முன்னிலையில் முதியவருக்கு, சலூன் கடைக்காரரை முடி திருத்தம் செய்ய வைத்த சம்பவம் நடந்துள்ளது.
 
தலித் என்பதால் முடி திருத்தம் செய்ய மறுப்பு

சித்ரதுர்கா மாவட்டம் ெசல்லக்கெரே தாலுகாவில் தலகு எனும் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் சீனிவாஸ் பாபு என்பவர் சொந்தமாக சலூன் கடை நடத்தி வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு சீனிவாஸ் பாபுவின் கடைக்கு அதேபகுதியை சேர்ந்த 60 வயது முதியவர் முடி திருத்தம் செய்ய சென்றுள்ளார். அப்போது தலித் சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் முதியவருக்கு, சீனிவாஸ் பாபு முடிதிருத்தம் செய்ய மறுத்துள்ளார். இதனால் அந்த முதியவர் மனஉளைச்சலுடன் வீட்டிற்கு திரும்பி சென்றுள்ளார். 
இந்த சம்பவம் அப்பகுதி தலித் அமைப்பு தலைவர் ஓபேலேசுக்கு தெரியவந்தது. 

இதையடுத்து அவர், சித்ரதுர்கா மாவட்ட கலெக்டர் கவிதா மண்ணிகேரியை சந்தித்து நடந்த அவல சம்பவத்தை எடுத்து கூறி நடவடிக்கை எடுக்கும்படி கோரிக்கை வைத்தார். இந்த கோரிக்கையை ஏற்ற கலெக்டர் கவிதா மண்ணிகேரி, செல்லக்கெரே தாசில்தார் ரகுமூர்த்தியை தொடர்ப்பு கொண்டு விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார். அதன்பேரில் தாசில்தார் ரகுமூர்த்தி, முதியவரிடம் விசாரணை நடத்தினார். அதில் தலித் என்பதால் சலூன் கடைக்காரர் முடி திருத்தம் செய்ய மறுத்தது உறுதியானது.
 
தாசில்தார் முன்னிலையில்...

இதையடுத்து தாசில்தார் ரகுமூர்த்தி, அதிகாரிகளுடன் முதியவரை அழைத்து கொண்டு சீனிவாசின் சலூன் கடைக்கு சென்றார். அங்கு தாசில்தார் ரகுமூர்த்தி, சீனிவாஸ் பாபுவிடம் முதியவரை அமர வைத்து முடி திருத்தம் செய்ய வேண்டும் எனவும், இல்லையென்றால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். 

இதனால் பயந்துபோன சீனிவாஸ் பாபு தாசில்தார் ரகுமூர்த்தி முன்னிலையில் முதியவரை நாற்காலியில் அமரவைத்து முடிதிருத்தம் செய்து அனுப்பி வைத்தார். இதையடுத்து தாசில்தார் ரகுமூர்த்தி, சீனிவாஸ் பாபுவிடம் இனிமேல் இதுபோன்று நடந்து கொள்ளகூடாது என்று எச்சரித்து அங்கிருந்து சென்றார். இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story