மயிலாடுதுறை மாவட்டத்தில் பரவலாக மழை
மயிலாடுதுறை மாவட்டத்தில் பரவ லாக மழை பெய்ததால் விவசாய அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டது.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டத்தில் பரவ லாக மழை பெய்ததால் விவசாய அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டது.
சீர்காழி
மயிலாடுதுறை மாவட்டத்தில் சமீப நாட்களாக கடுமையான வெயில் கொளுத்தி வந்தது. இதனால், பொதுமக்கள் குறிப்பாக வாகன ஓட்டிகள் அதிகளவு சிரமப்பட்டு வந்தனர். இந்தநிலையில் நேற்று மயிலாடுதுறை, சீர்காழி, திருவெண்காடு உள்ளிட்ட பகுதிகளில் நேற்று விட்டு, விட்டு மழை பெய்தது.
இந்த மழை பொதுமக்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்தாலும் சீர்காழி தாலுகாவிற்கு உட்பட்ட அகணி, வள்ளுவகுடி, நிம்மேலி, கொண்டல், ஆதமங்கலம், பெருமங்கலம், புங்கனூர், திருப்புங்கூர், கன்னியாகுடி, தொழுதூர், கற்கோவில், கதிராமங்கலம், எடக்குடி வடபாதி, வைத்தீஸ்வரன் கோவில், மருவத்தூர், சட்டநாதபுரம், திட்டை, தில்லைவிடங்கன், செம்மங்குடி, கடவாசல், வடகால், எடமணல், திருமுல்லைவாசல், விளந்திட சமுத்திரம், அத்தியூர் உள்ளிட்ட ஊராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் உளுந்து அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டன.
விவசாய அறுவடை பணிகள் பாதிப்பு
இந்த மழையின் காரணமாக அறுவடை பணிகள் மற்றும் அறுவடை செய்யப்பட்ட பயிறு வகைகள் பாதிக்கப்பட்டுள்ளது. இதேபோல, சீர்காழி தாலுகா பகுதியில் செங்கல் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்கள் மழையால் கடந்த 2 நாட்களாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
திருவெண்காடு
இதேபோல கொள்ளிடம், வைத்தீஸ்வரன் கோவில், திருவெண்காடு மற்றும் பூம்புகார் பகுதிகளில் நேற்று 2-வது நாளாக விட்டு, விட்டு மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. பூம்புகார் அருகே தர்மபுரம் கடைவீதியில் மழைநீர் வெளியேற முடியாமல் தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர். மழை பெய்தால் இந்த இடத்தில் தண்ணீர் தேங்குவது வாடிக்கையான ஒன்றாக உள்ளது. எனவே, இங்கு மழைநீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்தனர்.
மின்தடை
மேலும், மழையின் காரணமாக பூம்புகார், திருவெண்காடு பகுதிகளை சுற்றியுள்ள 20 ஊராட்சிகளில் 2-வது நாளாக மின்தடை ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டனர். சுமார் 6 மணி நேரத்திற்கு பிறகு மின்வினியோகம் செய்யப்பட்டது. இனிவரும் காலங்களில் தடையின்றி மின்சாரம் கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story