நீட் தேர்வு புதிய கல்விக் கொள்கையை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும்
சீர்காழி பழைய பஸ் நிலையம் அருகே, `நீட்' தேர்வு புதிய கல்விக் கொள்கை எதிர்ப்பு மாநில உரிமை மீட்பு பயண பொதுக்கூட்டம் நடைபெற்றது. கி.வீரமணி பேச்சு
சீர்காழி:
சீர்காழி பழைய பஸ் நிலையம் அருகே, `நீட்' தேர்வு புதிய கல்விக் கொள்கை எதிர்ப்பு மாநில உரிமை மீட்பு பயண பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் குணசேகரன் தலைமை தாங்கினார். மாவட்ட அமைப்பாளர் ஞானவள்ளுவன், சீர்காழி நகர தலைவர் சபாபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் திராவிடர் கழக தலைவர் கீ.வீரமணி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-
தமிழகத்தில் தமிழ் வாழ்க, இந்தி ஒழிக என ராமசாமி நாயக்கர் அப்போதே குரல் கொடுத்தார். அனைத்து சமுதாயத்தினரும் அர்ச்சகராக வேண்டும் என பெரியார் போராடினார். இதனை, முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நிறைவேற்றினார். தற்போது சமூகநீதிக் காவலராக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திகழ்ந்து வருகிறார். தமிழகத்தில் மத்திய அரசு, இந்தியை திணிக்கக்கூடாது. புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில் மத்திய அரசு தமிழக அரசுக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டு வருகிறது. `நீட்' மற்றும் புதிய கல்விக் கொள்கையை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும். தமிழக கவர்னர், தமிழக அரசால் இயற்றப்பட்ட 9 தீர்மானங்களை அனுப்பாமல் வைத்துள்ளார். இது கண்டிக்கத்தக்க செயல். தமிழகம் கல்வி, சுகாதாரம், மருத்துவம் உள்ளிட்ட கட்டமைப்புகளில் வலுவாக உள்ளது. இதை தடுக்கும் வகையில் மத்திய அரசு `நீட்' என்ற தேர்வை கொண்டு வந்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக திராவிடர் கழக பொதுச் செயலாளர் சந்திரசேகரன், சீர்காழி பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ., விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் சீனிவாசன், பெரியார் திராவிடர் கழக மாவட்ட செயலாளர் பெரியார் செல்வம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். கூட்டத்தில் தி.மு.க. நகர செயலாளர் சுப்பராயன், சீர்காழி நகர சபைத் தலைவர் துர்கா பரமேஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story