ஆன்லைன் லாட்டரி விற்பனை; 6 பேர் கும்பல் கைது ரூ.70 ஆயிரம், கார், மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்
புதுக்கோட்டையில் ஆன்லைன் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட 6 பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர். மேலும் ரூ.70 ஆயிரம், கார், மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.
புதுக்கோட்டை:
6 பேர் கைது
புதுக்கோட்டையில் வண்டிபேட்டை பகுதியில் ஆன்லைன் லாட்டரி விற்பனை அதிகமாக நடைபெறுவதாக கணேஷ்நகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் ரகசிய விசாரணை நடத்தினர். இதில் ஒரு கும்பல் செல்போனில் ஆன்லைன் மூலம் லாட்டரி விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து ஒருவரை பிடித்து அவர் மூலம் மற்றவர்களையும், மொத்த விற்பனையாளரையும் மடக்கி பிடித்தனர்.
இதில் மச்சுவாடி வண்டிபேட்டையை சேர்ந்த முத்துக்குமார் (வயது 27), மொத்த டீலரான பொன்னமராவதியை சேர்ந்த திருநாவுக்கரசு (44), புதுக்கோட்டை விஸ்வாஸ் நகரை சேர்ந்த அப்துல் ஜாபர் (40), அடப்பன்வயலை சேர்ந்த அமுல்ராஜ் (47), தொட்டியம்பட்டியை சேர்ந்த சரவணன் (34), சிவகங்கை மாவட்டம் உலகம்பட்டியை சேர்ந்த திருசெல்வம் (36) ஆகிய 6 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
ரூ.70 ஆயிரம் பறிமுதல்
கைதானவர்களிடம் இருந்து ரூ.70 ஆயிரத்து 420, 3 மோட்டார் சைக்கிள்கள், ஒரு சொகுசு கார், 11 செல்போன்கள், லாட்டரி சீட்டுகள் உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். கைதானவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் இந்த கும்பல் ஆன்லைன் லாட்டரி விற்பனையில் அதிகம் ஈடுபட்டது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
Related Tags :
Next Story