கடலூரில் கிறிஸ்தவர்கள் குருத்தோலை ஏந்தி பவனி
குருத்தோலை ஞாயிறையொட்டி கடலூரில் கிறிஸ்தவர்கள் குருத்தோலைகளை கையில் ஏந்தியபடி பவனி சென்றனர்.
கடலூர்,
ஏசு கிறிஸ்து தாம் வாழ்ந்த நாட்களில் ஜெருசலேமுக்கு கழுதையின் மீதேறி பவனியாக சென்றார். அப்போது வழியெங்கும் திரண்டு இருந்த மக்கள் வஸ்திரங்களை விரித்து, மரக்கிளைகளை போட்டு, ‘தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா’ என்று கூறி ஆர்ப்பரித்தார்கள் என்று கிறிஸ்தவர்களின் புனித நூலான பைபிளில் கூறப்பட்டுள்ளது.
இதை நினைவு கூரும் வகையில் லெந்து காலத்தின் கடைசி வாரத்துக்கு முந்தின ஞாயிற்றுக்கிழமையை குருத் தோலை ஞாயிறாக கிறிஸ்தவர்கள் கடைபிடித்து வருகிறார்கள். அதன்படி குருத்தோலை ஞாயிறான நேற்று அனைத்து தேவாலயங்களிலும் சிறப்பு ஆராதனை நடந்தது. இதையொட்டி கிறிஸ்தவர்கள் குருத்தோலை ஏந்தி பவனியாக சென்றனர்.
பவனி
கடலூர் புனித கார்மேல் அன்னை ஆலயத்தை சேர்ந்த கிறிஸ்தவர்கள், குருத்தோலைகளை ஏந்தியபடி பவனியாக ஆலயத்துக்குள் சென்றனர். தொடர்ந்து ஆலயத்தில் சிறப்பு திருப்பலி நடந்தது. இதேபோல் கடலூர் ஆற்காடு லூத்தரன் திருச்சபையிலும் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.
முன்னதாக திருச்சபையை சேர்ந்த கிறிஸ்தவர்கள் குருத்தோலைகளை ஏந்தி பவனியாக ஆலயத்துக்கு வந்தனர். இதேபோல் பல்வேறு தேவாலயங்களிலும் குருத்தோலை ஞாயிறையொட்டி சிறப்பு ஆராதனை நடந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் குருத்தோலைகளை ஏந்தியபடி பவனியாக சென்றனர்.
ஈஸ்டர்
லெந்து காலத்தின் கடைசி வாரமான இந்த வாரம் பெரிய வாரமாக கடைபிடிக்கப்படுகிறது. இதில் வருகிற வியாழக்கிழமை கட்டளை வியாழனாகவும், 15-ந்தேதி வெள்ளிக்கிழமை புனித வெள்ளியாகவும் கடைபிடிக்கப் படுகிறது. வருகிற 17-ந் தேதி ஏசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப் படுகிறது.
Related Tags :
Next Story