தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
எரியாத தெருவிளக்கு
விருதுநகர் மாவட்டம் மத்தியசேனை கிராமத்தின் பஸ் நிறுத்தம் அருகே உள்ள தெருவிளக்குகள் சரிவர எரியாமல் உள்ளது. இதனால் இரவு நேரங்களில் இந்த பகுதியில் இருள் சூழ்ந்து காணப்படுவதால் பெண்கள், குழந்தைகள் பஸ் நிறுத்தம் வர அச்சப்படுகின்றனர். இருட்ைட பயன்படுத்தி வழிப்பறி போன்ற சம்பவங்களும் நிகழவாய்ப்பு உள்ளது. எனவே அதிகாரிகள் தெருவிளக்கை எரிய வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், சிவகாசி.
தண்ணீர் பற்றாக்குறை
மதுரை 22-வது வார்டு விளாங்குடி சூசை நகர் தெருவில் உள்ள தண்ணீர் சேமிப்பு தொட்டியில் தண்ணீர் இன்றி காலியாக உள்ளது. இதனால் இப்பகுதியில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு குடிநீருக்கு அவதிப்படும் நிலை உள்ளது. அதிகாரிகள் இந்த தொட்டியில் தண்ணீர் நிரப்பி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மனோகரன், மதுரை.
ஆக்கிரமிப்பு
சிவகங்கை மாவட்டம் கல்லல் ஒன்றியத்திற்குட்பட்ட சுக்கான் ஊருணியில் ஆக்கிரமிப்பு அதிகமாக உள்ளது. மழை காலங்களில் ஊருணியில் இருந்து தண்ணீர் செல்ல வழியில்லாமல் காணப்படுகிறத. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சுவாமிநாதன், திருப்பத்தூர்.
நாய்கள் தொல்லை
ராமநாதபுரம் மாவட்டம் கல்லல் பகுதியில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் சமீபகாலமாக நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. இந்த நாய்கள் குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவரையும் அச்சுறுத்தி வருகின்றது. இருசக்கர வாகனங்களின் மீது நாய்கள் மோதுவதால் விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே பொதுமக்களுக்கு தொல்லை தரும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆறுமுகசாமி, ராமநாதபுரம்.
மாணவர்கள் அவதி
விருதுநகர் மாவட்டம் நாரணாபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் மாணவ-மாணவிகளின் சைக்கிள்களை நிறுத்த போதிய இடமின்றி பள்ளியின் வெளியே நிறுத்தி வருகின்றனர். வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் சைக்கிள்கள் பழுதாகின்றது. மேலும் சைக்கிள் திருட்டு சம்பவங்களும் அவ்வப்போது நிகழ்ந்து வருகின்றது. இதனால் மாணவர்கள் அவதிப்படுகின்றனர். எனவே பள்ளியில் போதிய இடவசதி அமைத்து சைக்கிள்களை பள்ளிக்கு உள்ளே நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விநாயகமூர்த்தி, மீனம்பட்டி.
Related Tags :
Next Story