நெல்லையில் குருத்தோலை ஞாயிறு பவனி
நெல்லையில் குருத்தோலை ஞாயிறு பவனி நேற்று நடைபெற்றது.
நெல்லை:
நெல்லையில் குருத்தோலை ஞாயிறு பவனி நேற்று நடைபெற்றது.
குருத்தோலை பவனி
ஏசு கிறிஸ்துவின் சிலுவை பாடுகளையும், உயிர்த்தெழுதலையும் நினைவுபடுத்தும் வகையில் ஆண்டுதோறும் கிறிஸ்தவர்கள் 40 நாட்கள் தவக்காலம் இருந்து வருகிறார்கள். கடந்த மார்ச் மாதம் 2-ந் தேதி சாம்பல் புதனுடன் இந்த தவக்காலம் தொடங்கியது.
தினமும் கிறிஸ்தவ ஆலயங்களில் தவக்கால பிரார்த்தனை, சிலுவை பயண நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.
தவக்காலத்தின் இறுதி வாரம் புனித வாரமாக கடைபிடிக்கப்படுகிறது. இதன் தொடக்க நாளான நேற்று குருத்தோலை ஞாயிறாக கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி கிறிஸ்தவ ஆலயங்களில் குருத்தோலை பவனி நடைபெற்றது.
பாளையங்கோட்டை தெற்கு பஜார் சவேரியார் பேராலயத்தில் நடைபெற்ற பவனியில் கத்தோலிக்க மறைமாவட்ட பிஷப் அந்தோணி சாமி, சி.எஸ்.ஐ. பிஷப் பர்னபாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் பங்கு தந்தை ராஜேஷ் மற்றும் ஏராளமான இறை மக்கள் கையில் குருத்தோலையுடன் கலந்து கொண்டனர்.
குழந்தை ஏசு பள்ளியில் இருந்து புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக சென்று பேராலயத்தில் நிறைவடைந்தது. இதேபோல் நெல்லையில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் குருத்தோலை ஞாயிறு பவனி நடைபெற்றது.
புனித வெள்ளி
இதன் தொடர்ச்சியாக வருகிற 14-ந் தேதி பெரிய வியாழன் அன்று பாதம் கழுவுதல் நிகழ்ச்சியும், 15-ந் தேதி ஏசு சிலுவையில் அறையப்பட்ட புனித வெள்ளியும் கடைபிடிக்கப்படுகிறது. அன்று சிலுவை பாதை ஊர்வலம் நடக்கிறது. 17-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஏசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
பணகுடி
பணகுடி புனித சூசையப்பர் ஆலயத்தில் குருத்தோலை ஞாயிறு கொண்டாடப்பட்டது. பணகுடி பங்குத்தந்தை இருதயராஜ், பணகுடி மாதா கோவிலில் குருத்தோலையை புனிதநீர் தெளித்து ஜெபம் செய்தார். பின்னர் கிறிஸ்தவர்கள் குருத்தோலையை கையில் ஏந்தி ஆலயத்தில் இருந்து ஓசன்னா கீதம் பாடியவாறு பணகுடி மெயின் ரோடு, மங்கம்மாள் சாலை வழியாக ஊர்வலமாக புனித சூசையப்பர் ஆலயத்துக்கு வந்தனர். பின்னர் ஆலயத்தில் திருப்பலி நடைபெற்றது.
Related Tags :
Next Story