போக்குவரத்துத்துறையின் முன்னேற்றத்திற்கு உரிய பணிகளை செய்து முடிப்பேன் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் உறுதி


போக்குவரத்துத்துறையின் முன்னேற்றத்திற்கு உரிய பணிகளை செய்து முடிப்பேன் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் உறுதி
x
தினத்தந்தி 11 April 2022 1:28 AM IST (Updated: 11 April 2022 1:28 AM IST)
t-max-icont-min-icon

போக்குவரத்துத்துறையின் முன்னேற்றத்திற்கு உரிய பணிகளை செய்து முடிப்பேன் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் உறுதி அளித்தார்.

ஜெயங்கொண்டம்
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் நகரில் தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையை விளக்கி, உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பொதுக்கூட்டம் ஜெயங்கொண்டம் சன்னதி தெருவில் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட செயலாளரும், தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சருமான எஸ்.எஸ்.சிவசங்கர் கலந்து கொண்டு பேசுகையில், உலகத்தையே உலுக்கிய கொரோனாவின் கட்டுப்பாட்டிலிருந்து பொது மக்களை காப்பாற்றும் நோக்கில் தானே முன்னின்று கொரோனா கட்டுப்பாட்டு அறைக்குள் அதற்குரிய அங்கிகளை அணிந்து உள்ளே சென்று நோயாளிகளை பார்வையிட்டு உரிய சிகிச்சை அளிக்க கூறி வந்தவர் நமது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின். தமிழகத்தில் தேர்தல் அறிக்கையில் இல்லாத இல்லம் தேடி கல்வி, மக்களை தேடி மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறார். பெண்கள் கல்வியில் முன்னேற்றம் அடைய வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் 8-ம் வகுப்பு வரை படித்த பெண்களுக்கு திருமண உதவித் தொகையாக ரூ.5 ஆயிரம் வழங்கிய கலைஞரின் திட்டத்தில் இருந்து தற்போது திருமண உதவித்தொகையை உயர்த்தி வழங்கி பெண்களை கல்லூரி கல்வி வரை படிக்கச் செய்து உயர்த்தி வருகிறார். வேளாண்மைத் துறைக்கு தனி பட்ஜெட், தொழில் துறைக்கு தனி பட்ஜெட், வெளிநாட்டு நிறுவனங்களை தமிழகத்தில் முதலீடு செய்ய வைத்து துபாய் சென்று இந்தியாவிலேயே சிறந்த முதல்-அமைச்சர்  என்ற பெயரை ஈட்டியது நமது முதல்-அமைச்சர் மட்டுமே. நமது பகுதிக்கு போக்குவரத்துத்துறையை எனக்கு வழங்கிய பொறுப்பை முழுமையாக செய்து முடிப்பேன். போக்குவரத்துத்துறையின் முன்னேற்றத்திற்கு உரிய பணிகளை செய்து முடிப்பேன் என்றார். 
முன்னதாக ஜெயங்கொண்டம் நகர்மன்றத் துணைத் தலைவர் கருணாநிதி வரவேற்று பேசினார். அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒன்றிய பொறுப்பாளர்கள் அனைவரும் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளர் தக்கோலம், தேவபாலன், தமிழ் கொண்டான், ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ. கண்ணன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். கூட்டத்தில் மாநில, மாவட்ட, நகர, பேரூர் தி.மு.க. நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story