கோவில் நிலத்தில் குடிசை அமைத்த கிராம மக்கள்


கோவில் நிலத்தில் குடிசை அமைத்த கிராம மக்கள்
x
தினத்தந்தி 11 April 2022 1:37 AM IST (Updated: 11 April 2022 1:37 AM IST)
t-max-icont-min-icon

தேவூர் அருகே கோவில் நிலத்தில் வீட்டு மனைப்பட்டா கேட்டு கிராம மக்கள் அந்த நிலத்தில் குடிசை அமைத்ததால் திடீரென பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து கிராம மக்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

தேவூர்:-
தேவூர் அருகே கோவில் நிலத்தில் வீட்டு மனைப்பட்டா கேட்டு கிராம மக்கள் அந்த நிலத்தில் குடிசை அமைத்ததால் திடீரென பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து கிராம மக்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
கோவில்  நிலம்
தேவூர் அருகே காவேரிப்பட்டி அக்ரஹாரம் ஊராட்சி ஆதிதிராவிடர் தெரு பகுதியில் சுமார் 30-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் வசிக்கும் மக்கள் வீடுகள் கட்டி குடியிருக்க போதிய இடவசதி இல்லை என கூறப்படுகிறது. 
இந்த நிலையில் அதே பகுதியில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுபாட்டில் உள்ள காவேரி நாதர்சாமி கோவிலுக்கு சொந்தமான இடத்தில் நேற்று முன்தினம் இரவு திடீரென கிராம மக்கள் குடிசை அமைக்க முடிவு செய்து தென்னங்கீற்று மற்றும் மரச்சாமான்கள் கொண்டு வந்து இறக்கினர். 
இதையடுத்து நேற்று காலையில் 10-க்கும் மேற்பட்ட குடிசைகளை அங்கு அமைத்தனர். மேலும் கீற்றுக் கொட்டகை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது சிலர் குடிசையில் அமர்ந்து இலவச வீட்டு மனை பட்டா கேட்டு கோரிக்கை விடுத்தனர்.
அதிகாரிகள் பேச்சுவார்த்தை
இது குறித்து தகவல் கிடைத்ததும், தேவூர் வருவாய் ஆய்வாளர் சத்யராஜ், காவேரிபட்டி அக்ரஹார கிராம நிர்வாக அலுவலர் கருப்பண்ணன், சங்ககிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவி, தேவூர் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில் குமரன் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் நேரில் சென்று கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள காவேரிநாதர் சாமி கோவில் நிலத்தில் பட்டா வழங்க இயலாத நிலை உள்ளதால் வேறு இடத்தில் இலவச வீட்டு மனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து அந்த பகுதி மக்கள் இன்றைக்குள் (திங்கட்கிழமை) கீற்று கொட்டகைகளை அகற்றி கொள்வதாக கூறி கலைந்து சென்றனர்.

Next Story