கிறிஸ்தவர்கள் குருத்தோலை ஏந்தி ஊர்வலம்


கிறிஸ்தவர்கள் குருத்தோலை ஏந்தி ஊர்வலம்
x
தினத்தந்தி 11 April 2022 1:37 AM IST (Updated: 11 April 2022 1:37 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் குருத்தோலை ஞாயிறையொட்டி ஊர்வலம் நடந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

சேலம்:-
சேலத்தில் குருத்தோலை ஞாயிறையொட்டி ஊர்வலம் நடந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
குருத்தோலை ஞாயிறு
கிறிஸ்தவர்களின் கடவுளான இயேசு கிறிஸ்து ஜெருசலேம் நகருக்குள் கழுதை குட்டியின் மீது அமர்ந்தவாறு வந்தபோது, பொதுமக்கள் அவரை குருத்தோலைகள், மரக்கிளைகளை ஏந்தியவாறும், துணிகளை தரையில் விரித்தும் வரவேற்றனர். மேலும் தாவீதின் மைந்தனுக்கு ஓசன்னா, கர்த்தரின் நாமத்தினாலே வருகிறவர் மகிமைப்படுத்தப்பட்டவர், உன்னதத்திலே ஓசன்னா என்று ஆர்ப்பரித்தார்கள்.
இந்த சம்பவத்தை நினைவு கூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தைய ஞாயிற்றுக்கிழமையை உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் குருத்தோலை ஞாயிறாக கடைபிடித்து வருகிறார்கள். அதன்படி இந்த ஆண்டு குருத்தோலை ஞாயிறு நேற்று கடைபிடிக்கப்பட்டது.
ஊர்வலம்
இதையொட்டி சேலத்தில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் சிறப்பு ஆராதனைகள் நடந்தன. சேலம் 4 ரோடு அருகே உள்ள குழந்தை இயேசு பேராலயத்தில் ஆயர் அருள் செல்வன் ராயப்பன் தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது. முன்னதாக கிறிஸ்தவர்கள் ஆலயத்தை சுற்றி குருத்தோலைகளை கைகளில் ஏந்தியவாறுஊர்வலமாக சென்றனர். 
இதில் பங்கு தந்தை ஜோசப் லாசர், உதவி பங்கு தந்தை மோசியா மற்றும் கிறிஸ்தவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதேபோல் சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள சி.எஸ்.ஐ. கிறிஸ்துநாதர் ஆலயத்தில் ஆயர் ஜவகர் வில்சன் ஆசிர் டேவிட் தலைமையிலும், கோட்டை சி.எஸ்.ஐ. லெக்லர் நினைவாலயத்தில் ஆயர் எழில் ராபர்ட் கெவின் தலைமையிலும், அஸ்தம்பட்டி சி.எஸ்.ஐ. இமானுவேல் ஆலயத்தில் ஆயர் தானுபிள்ளை தலைமையிலும், சூரமங்கலம் ஜங்ஷன் சி.எஸ்.ஐ. திரித்துவ ஆலயத்தில் ஆயர் சாந்திபிரேம்குமார் தலைமையிலும் குருத்தோலை ஞாயிறு ஊர்வலம் நடந்தது.
இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு பனை, தென்னை மர ஓலைகளை கைகளில் ஏந்தியவாறு ‘தாவீதின் மைந்தனுக்கு ஓசன்னா’ என்று பாடியபடி ஊர்வலமாக சென்றனர். பின்னர் தேவாலயங்களில் சிறப்பு ஆராதனை நடந்தது.

Next Story