பண்ணாரி- புளிஞ்சூர் சோதனைசாவடியில் பல கி.மீ. தூரத்துக்கு அணிவகுத்து நின்ற லாரிகளால் போக்குவரத்து பாதிப்பு; வனத்துறையினரிடம், டிரைவர்கள் வாக்குவாதம்


பண்ணாரி- புளிஞ்சூர் சோதனைசாவடியில் பல கி.மீ. தூரத்துக்கு அணிவகுத்து நின்ற லாரிகளால் போக்குவரத்து பாதிப்பு; வனத்துறையினரிடம், டிரைவர்கள் வாக்குவாதம்
x
தினத்தந்தி 11 April 2022 2:14 AM IST (Updated: 11 April 2022 2:14 AM IST)
t-max-icont-min-icon

பண்ணாரி மற்றும் புளிஞ்சூர் சோதனை சாவடியில் பல கிலோ மீட்டர் தூரத்துக்கு அணிவகுத்து நின்ற லாரிகளால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் வனத்துறையினரிடம் டிரைவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

சத்தியமங்கலம்
பண்ணாரி மற்றும் புளிஞ்சூர் சோதனை சாவடியில் பல கிலோ மீட்டர் தூரத்துக்கு அணிவகுத்து நின்ற லாரிகளால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் வனத்துறையினரிடம் டிரைவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 
அனுமதிக்கப்படவில்லை
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் திம்பம் மலைப்பாதை உள்ளது. திம்பம் மலைப்பாதையில் 12 சக்கரங்களுக்கு உள்பட்ட லாரிகள் மற்றும் 16.2 டன்னுக்கு குறைவான வாகனங்கள் மட்டுமே செல்ல அனுமதிக்க வேண்டும். மேலும் 12 சக்கரங்களுக்கு மேற்பட்ட வாகனங்கள் மற்றும் 16.2 டன்னுக்கு மேற்பட்ட எடை கொண்ட வாகனங்கள் செல்ல அனுமதிக்க கூடாது என சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. 
இதைத்தொடர்ந்து 12 சக்கரங்களுக்கு குறைவான வாகனங்கள் மற்றும் 16.2 டன்னுக்கு குறைவான எடை கொண்ட வாகனங்கள் மட்டும் திம்பம் மலைப்பாதையில் செல்ல அனுமதிக்கப்பட்டு வருகின்றன. மேலும் 12 சக்கரங்கள் மற்றும் 16.2 டன்னுக்கு மேலான எடை கொண்ட வானகங்கள் திம்பம் மலைப்பாதையில் செல்ல அனுமதிக்கப்படவில்லை. 
அணிவகுத்து நின்ற லாரிகள்
இதனால் ஏராளமான லாரிகள் பண்ணாரி சோதனை சாவடியில் தடுத்து நிறுத்தப்பட்டன. நேற்று முன்தினம் இரவு முதல் ஏராளமான லாரிகள் திம்பம் மலைப்பாதையில் செல்ல முடியாததால் பண்ணாரி சோதனை சாவடி பகுதியில் பல கிலோ மீட்டர் தூரத்துக்கு அணிவகுத்து நின்றன. 
கேரள மாநிலம் கொச்சின் மற்றும் திருச்செந்தூர் ஆகிய பகுதிகளில் இருந்து உரம் மற்றும் டயர் ஏற்றி வந்த லாரிகள், தூத்துக்குடியில் இருந்து உப்பு ஏற்றி வந்த லாரிகள், சிவகாசியில் இருந்து காகிதங்கள் ஏற்றி வந்த லாரிகள், கோவையில் இருந்து மோட்டார் உதிரிபாகங்களை ஏற்றி வந்த லாரிகள் என 300-க்கும் மேற்பட்ட லாரிகள் பண்ணாரி சோதனை சாவடியில் தடுத்து நிறுத்தப்பட்டதால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் பஸ்களில் வந்த பயணிகள் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு நடந்தே சென்றனர். 
வாக்குவாதம்
சரக்குகளை ஏற்றி வந்த லாரி டிரைவர்கள், சோதனை சாவடியில் இருந்த வனத்துறை மற்றும் போலீசாரிடம் கோர்ட்டு உத்தரவு குறித்து எங்களுக்கு எந்த தகவலும் தெரியாது. எனவே எங்களை இன்று (அதாவது நேற்று) அனுமதியுங்கள் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆனால் வனத்துறையினர் மற்றும் போலீசார் அவ்வாறு வாகனங்களை விட எங்களுக்கு எந்தவித உத்தரவும் இல்லை என மறுத்தனர். இதனால் டிரைவர் ஒருவர் ஆத்திரம் அடைந்து தான் ஓட்டி வந்த லாரியை ரோட்டின் குறுக்கே  நிறுத்திவிட்டு எந்தவித வாகனங்களும் செல்ல கூடாது என தகராறு செய்தார். உடனே அதிகாரிகள் விரைந்து சென்று அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத்தொடர்ந்து லாரியை, டிைரவர் அங்கிருந்து அப்புறப்படுத்தினார். 
இந்த சம்பவம் காரணமாக பண்ணாரி சோதனை சாவடியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.  இந்த நிலையில் இன்று (திங்கட்கிழமை)  பண்ணாரி சோதனை சாவடியில் லாரி உரிமையாளர்கள் மற்றும் டிரைவர்கள் சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. 
புளிஞ்சூர் சோதனை சாவடி
தமிழகத்தில் இருந்து கர்நாடக மாநில பகுதிகளுக்கு செல்லும் கனரக வாகனங்கள் பண்ணாரி சோதனை சாவடியில் தடுத்து நிறுத்தப்பட்டன என்றால், கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழ்நாட்டு வரும் கனரக வாகனங்கள் தாளவாடியை அடுத்த புளிஞ்சூர் சோதனை சாவடியில் தடுத்து நிறுத்தப்பட்டதால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்பட்டனர். 
ஏற்கனவே கடந்த 2 நாட்களாக தாளவாடியை அடுத்து தமிழக- கர்நாடக எல்லையில் உள்ள காரப்பள்ளம் சோதனை சாவடியில் கனரக வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன. இந்த நிலையில் 3-வது நாளாக நேற்று காரப்பள்ளம் சோதனை சாவடி அருகே உள்ள புளிஞ்சூர் சோதனை சாவடியில் கனரக வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன. இதன்காரணமாக புளிஞ்சூர் சோதனை சாவடி பகுதியிலும் வாகனங்கள் பல கிலோ மீட்டர் தூரத்துக்கு அணிவகுத்து நின்றன.

Next Story