வடநெம்மேலி பாம்பு பண்ணை திறப்பு: பார்வையாளர்களுக்கு காட்சிப்படுத்துவதற்காக 10 நாட்களில் 357 பாம்புகள் பிடிப்பு
வடநெம்மேலி பாம்பு பண்ணை திறக்கப்பட்ட 10 நாட்களில் பார்வையாளர்கள் முன் காட்சிபடுத்தவும், விஷம் எடுப்பதற்காகவும் 357 விஷ பாம்புகளை பழங்குடி இருளர்கள் பிடித்துள்ளனர்.
தொழில் வணிகத்துறை
இருளர் பழங்குடி இன மக்களின் வாழ்வாதாரம் மேம்பட செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அடுத்த கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள வடநெம்மேலி பகுதியில் தமிழக அரசின் தொழில் வணிகத்துறை சார்பில் இருளர் பாம்பு பிடிப்போர் தொழில் கூட்டுறவு சங்கம் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்டு, அங்கு பார்வையாளர்கள் முன்பு கொடிய விஷமுள்ள பாம்புகளிடம் இருந்து விஷம் எடுக்கும் பாம்பு பண்ணை செயல்பட்டு வருகிறது.
பாம்பு பிடிப்போர் கூட்டுறவு சங்கத்தில் உள்ள 350 இருளர் இனத்தவர்கள் அனுமதி சான்று பெற்று ஆண்டுதோறும் பாம்பு பிடித்து கூட்டுறவு சங்கத்திற்கு வழங்கி வருகின்றனர்.
புனேயில் உள்ள ஆராய்ச்சி மையம்
சங்கத்திற்கு கொண்டு வரப்படும் பாம்புகள் பராமரிக்கப்பட்டு அதில் இருந்து எடுக்கப்படும் விஷத்தை அரசின் உதவியுடன் மராட்டிய மாநிலம், புனேயில் உள்ள ஆராய்ச்சி மையத்திற்கு வழங்கி வருகின்றனர். பாம்புகளை பிடிக்க கூட்டுறவு சங்கத்திற்கு ஆண்டுதோறும் வனத்துறை சார்பில் அரசாணை வெளியிட்டு, அனுமதி கடிதம் வழங்கப்படுவது வழக்கம். இந்த நிலையில் தமிழக அரசின் அனுமதி வழங்கப்படாததால் 3 மாதத்திற்கு பாம்பு பண்ணை மூடப்பட்டு இருந்தது. இதையடுத்து பாம்பு பிடிக்கும் இருளர்களின் வாழ்வாதாரத்தை காக்கும் வகையில் தமிழக அரசு பாம்பு பிடிக்கவும், மூடப்பட்ட பாம்பு பண்ணையை திறக்கவும் அனுமதி அளித்து அரசாணை வெளியிடப்பட்டு கடந்த 1-ந்தேதி பாம்பு பண்ணை திறக்கப்பட்டது.
10 நாட்களில் பிடிக்கப்பட்ட 357 விஷ பாம்புகள்
வடநெம்மேலி பாம்பு பண்ணை திறக்கப்பட்டதும் சுற்றுலா பயணிகள் அங்கு கூட்டம், கூட்டமாக வரத்தொடங்கினர். இதையடுத்து 3 மாதமாக பாம்பு பிடிக்கும் தொழிலுக்கு செல்லாமல் இருந்த பழங்குடி இருளர்கள் தற்போது வயல்வெளிகள், செடி, கொடிகள் படர்ந்த புதர்கள் உள்ள இடங்களுக்கு சென்று பாம்பு பிடிக்கும் பணியில் ஆர்வமாக ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 10 நாட்களில் 119 நல்லபாம்பு (கருநாகம், கோதுமை நாகம் உள்பட), 103 வடநகட்டுவிரியன், 118 கண்ணாடி விரியன், 17 சுருட்டை விரியன் என மொத்தம் 357 விஷ பாம்புகளை 10 நாட்களில் பிடித்து பாம்பு பண்ணையில் கொடுத்துவிட்டு அதற்கான ஊதியத்தை வாங்கிவிட்டு சென்றுள்ளனர். பிடித்து வரப்பட்ட விஷ பாம்புகள் அனைத்தும் பாம்பு பண்ணையில் மண் பானைகளில் அடைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது.
உணவாக எலி குஞ்சுகள்
மேலும் தற்போது கோடைக்காலம் என்பதால் மண் பானைக்குள் அடைத்து வைக்கப்பட்டுள்ள பாம்புகளுக்கு தாகம் தீர்ப்பதற்காக அடிக்கடி தண்ணீர் வழங்கப்பட்டும், எலி குஞ்சுகள் உணவாகவும் வழங்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன.
Related Tags :
Next Story