மின் இணைப்புக்காக காத்திருக்கும் ஆதிவாசி மக்கள்


மின் இணைப்புக்காக காத்திருக்கும் ஆதிவாசி மக்கள்
x
தினத்தந்தி 11 April 2022 8:22 PM IST (Updated: 11 April 2022 8:22 PM IST)
t-max-icont-min-icon

தேவர்சோலை அருகே புதிய வீடு, மின் இணைப்புக்காக ஆதிவாசி மக்கள் காத்து கிடக்கின்றனர்.

கூடலூர்

தேவர்சோலை அருகே புதிய வீடு, மின் இணைப்புக்காக ஆதிவாசி மக்கள் காத்து கிடக்கின்றனர். 

ஆதிவாசி கிராமம்

நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகாவில் தேவர்சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட கோட்டைமேடு ஆதிவாசி கிராமம் உள்ளது. இங்கு 10 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அவர்கள் மிகவும் பழுதடைந்த வீடுகளில் வசித்து வந்தனர். தொடர்ந்து பல்வேறு கோரிக்கைகளுக்கு பிறகு 5 குடும்பத்துக்கு புதிய வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டது. ஆனால் மீதமுள்ள குடும்பங்களுக்கு இதுவரை வீடுகள் கட்டி கொடுக்கப்படவில்லை. 

இதனால் உடைந்த மேற்கூரை வழியாக வானம் பார்த்த நிலையில், அவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே கூடுதல் வீடுகள் கட்டித்தர வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் போதிய நிதி இல்லாததால் புதிய வீடுகள் கட்டுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

மின் இணைப்பு இல்லை

இதன் காரணமாக பழுதடைந்த வீடுகளில் ஆதிவாசி குடும்பங்கள் வசிக்க வேண்டிய நிலை தொடர்கிறது. மேலும் பழைய மற்றும் புதிய வீடுகளுக்கு மின்சாரம் வழங்கப்படவில்லை. தற்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று புதிய கவுன்சிலர்கள் கொண்ட மன்றம் அமைக்கப்பட்டு உள்ளது.

இதனால் வரும் நாட்களில் தங்களுக்கு புதிய வீடுகள் மற்றும் மின்சார வசதி செய்து தர வேண்டும் என்று ஆதிவாசி குடும்பத்தினர் எதிர்பார்த்து உள்ளனர்.இதுகுறித்து ஆதிவாசி மக்கள் கூறியதாவது:- எங்கள் கிராமத்தில் 10 குடும்பங்கள் உள்ளது. இதில் 5 குடும்பத்துக்கு வீடுகள் கட்டி தரப்படவில்லை. இதனால் பழுதடைந்த வீடுகளில் வசிக்க வேண்டிய நிலை உள்ளது. 

நிதி ஒதுக்க வேண்டும்

மழைக்காலத்தில் புதிய வீடுகளில் வசிக்கும் குடும்பத்தினருடன் சேர்ந்து தங்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் போதிய இட வசதி இல்லாமல் பெரும் சிரமத்திற்கு ஆளாக நேரிடுகிறது. மேலும் மின் இணைப்பு வழங்கவில்லை. 

இதனால் இருளில் வசிக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே பழுதடைந்த வீடுகளுக்கு பதிலாக புதிய வீடுகள் கட்டித்தர வேண்டும் என்றும், மின் இணைப்பு வழங்க வேண்டும் என்றும் நீண்ட காலமாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வலியுறுத்தப்பட்டு வருகிறது. எனவே இனி வரும் நாட்களிலாவது நிதி ஒதுக்கி மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story