திண்டுக்கல் மாநகராட்சி கூட்டம் சொத்துவரி உயர்வை எதிர்த்து அ.தி.மு.க.-பா.ஜனதா வெளிநடப்பு
திண்டுக்கல் மாநகராட்சி கூட்டத்தில் சொத்துவரி உயர்வு தீர்மானத்தை எதிர்த்து அ.தி.மு.க.-பா.ஜனதா கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.
திண்டுக்கல்:
அ.தி.மு.க. வெளிநடப்பு
திண்டுக்கல் மாநகராட்சி கூட்டம், மேயர் இளமதி தலைமையில் நடைபெற்றது. துணை மேயர் ராஜப்பா, கமிஷனர் சிவசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் சொத்து வரி உயர்வு தொடர்பான தீர்மானம் உள்பட மொத்தம் 3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அப்போது நடைபெற்ற விவாதம் வருமாறு:-
ராஜ்மோகன் (அ.தி.மு.க.):- கொரோனாவால் கடந்த 2 ஆண்டுகளாக மக்கள் வாழ்வாதாரம், பொருளாதாரத்தை இழந்து தவிக்கின்றனர். இந்தநிலையில் சொத்துவரி 150 சதவீதம் வரை உயர்த்தப்படுகிறது. அதோடு அ.தி.மு.க. கொண்டு வந்த தாலிக்கு தங்கம், அம்மா மினிகிளினிக், மானிய விலையில் ஸ்கூட்டர் ஆகிய திட்டங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. இவற்றை கண்டித்து வெளிநடப்பு செய்கிறோம்.
(இதையடுத்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் 4 பேரும் கோஷமிட்டபடி கூட்ட அரங்கை விட்டு வெளியேறினர்)
கணேசன் (மா.கம்யூ):- சொத்துவரி உயர்வை மறுபரிசீலனை செய்ய வேண்டும். மத்திய அரசின் நிர்பந்தத்தால் மக்கள் மீது வரி உயர்வை சுமத்தக்கூடாது. உள்ளாட்சி அமைப்புகளுக்கே வரி உயர்வில் அதிகாரம் உள்ளது. எனவே தமிழக அரசு வரி உயர்வை திரும்ப பெறவேண்டும்.
தனபாலன் (பா.ஜனதா):- சொத்துவரியை உயர்த்தியது தமிழக அரசின் முடிவு. 5 ஆண்டுகளுக்கு பின்னர் தேர்தல் நடந்துள்ளதால் உள்ளாட்சி பிரதிநிதிகளிடம் மக்கள் அதிகம் எதிர்பார்க்கின்றனர். ஆனால் 2-வது கூட்டத்திலேயே சொத்து வரி உயர்வுக்கு தீர்மானம் கொண்டு வரப்படுகிறது. இந்த சொத்துவரி உயர்வு தீர்மானத்தை நிறுத்தி வைக்க வேண்டும்.
மத்திய அரசு நிதி
ஜான்பீட்டர் (தி.மு.க.):- கடந்த 2018-ம் ஆண்டே சொத்துவரியை உயர்த்தி அரசாணை வெளியிட்டுள்ளது. தற்போது மத்திய அரசின் அழுத்தத்தால் சொத்து வரி உயர்த்தப்பட்டு இருக்கிறது. எனினும் குறைந்த அளவே வரி உயர்வு உள்ளது.
ஜோதிபாசு (மா.கம்யூ):- தமிழகத்துக்கான நிதியை மத்திய அரசு வழங்கி இருந்தால், சொத்துவரி உயர்த்தப்பட்டு இருக்காது. அதேநேரம் வரி உயர்வு மட்டுமே வருவாயை அதிகரித்து விடாது. பஸ் நிலைய கடைகளை ஏலத்தில் விடுதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
தனபாலன் (பா.ஜனதா):- மத்திய அரசு தமிழகத்துக்கு நிதி வழங்கி வருகிறது. உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் இருந்ததால் நிதி வழங்கவில்லை. இனிமேல் நிதி வழங்குவார்கள். மத்திய அரசை தமிழ்நாட்டுக்குள் ஒன்றிய அரசு என்றும், டெல்லிக்கு சென்றால் மத்திய அரசு என்றும் கூறுகின்றனர்.
மாரியம்மாள் (மா.கம்யூ):- சொத்துவரி உயர்வால் மக்கள் பாதிக்கப்படுவார்கள். எனவே அதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
மேயர் இளமதி:- பா.ஜனதா ஆளும் மாநிலங்கள் உள்பட பல மாநிலங்களில் சொத்துவரி கடுமையாக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் மக்களை பாதிக்காதவாறு குறைந்த அளவில் வரி உயர்த்தப்பட்டு இருக்கிறது. இது தொடர்பாக ஆட்சேபனை இருந்தால் தெரிவிக்கலாம்.
பா.ஜனதா வெளிநடப்பு
தனபாலன் (பா.ஜனதா):- சொத்துவரி உயர்வு தீர்மானத்தை நிறைவேற்றாமல் நிறுத்தி வைக்க வேண்டும்.
மேயர்:- சொத்துவரி உயர்வு அரசு உத்தரவு. எனவே அதுதொடர்பான தீர்மானத்தை நிறுத்த முடியாது.
(இதையடுத்து பா.ஜனதா கவுன்சிலர் தனபாலன் சொத்துவரி உயர்வை கண்டித்து கோஷமிட்டபடி வெளிநடப்பு செய்தார்)
ஜானகிராமன் (தி.மு.க.):- அ.தி.மு.க. ஆட்சியிலேயே வரி உயர்த்தப்பட்டு உள்ளது. குப்பைக்கும் வரி போடப்பட்டது. பெட்ரோல், டீசல் விலையால் அனைத்து பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது. அதுபற்றி பா.ஜனதாவினருக்கு பேச தெரியாதா? ஒன்றிய அரசு என்பதில் எந்த தவறும் இல்லை. டெல்லி சென்றாலும் ஒன்றிய அரசு என்றே கூறுவோம்.
துணை மேயர் ராஜப்பா:- சொத்துவரி உயர்வு பற்றி இறுதி வரை வாதிடாமல் பாதியிலேயே வெளிநடப்பு செய்கிறார்கள். நகராட்சி அந்தஸ்த்தில் இருக்கும் திண்டுக்கல்லை மாநகராட்சியாக அ.தி.மு.க. ஆட்சியில் அறிவித்து விட்டு அதை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கவில்லை. தாலிக்கு தங்கம் திட்டத்தில் அ.தி.மு.க. ஆட்சியிலேயே உதவித்தொகை, தங்கம் வழங்கப்படவில்லை. அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் அ.தி.மு.க. அரசு நஷ்டத்தை ஏற்படுத்தியது. சொத்துவரி மிகவும் குறைந்த அளவே உயர்த்தப்பட்டுள்ளதால் மக்களை பாதிக்காது.
கார்த்திக் (காங்கிரஸ்) :- சொத்துவரி உயர்வு மக்களை பாதிக்கும் என்பதால் அதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
மேயர் இளமதி:- மக்களுக்கான அனைத்து அடிப்படை வசதிகளையும் மேம்படுத்துவது முக்கியம். இதற்கு சொத்துவரி உயர்வு மிகவும் அவசியமானது.
மேற்கண்டவாறு விவாதம் நடைபெற்றது.
மேலும் சொத்துவரி தீர்மானத்தை எதிர்க்கும் வகையில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் ராஜ்மோகன், பாஸ்கரன், உமாதேவி, சத்தியவாணி ஆகியோர் கருப்பு ஆடை, துண்டு அணிந்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story