மதுபாட்டில்கள் பதுக்கியவர் கைது
சட்டவிரோதமாக மதுபாட்டில்களை பதுக்கியவர் கைது செய்யப்பட்டார்.
மதுபாட்டில்கள் பறிமுதல்
கனகம்மாசத்திரம் அடுத்த ராமஞ்சேரி கிராமத்தை சேர்ந்த பிச்சாண்டி மகன் சந்திரன் (வயது 38). இவர் சட்ட விரோதமாக தன்னுடைய வீட்டில் ஆந்திர மாநில மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதாக கனகம்மாசத்திரம் போலீஸ் நிலையத்திற்கு புகார் வந்தது. இதனையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை மற்றும் போலீசார் அங்கு சென்று சோதனை செய்தனர். அப்போது அங்கு 36 மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மற்றொரு சம்பவம்
இதேபோல் திருவாலங்காடு அடுத்த மணவூர் பகுதியை சேர்ந்தவர் தவசுபால் (63). இவர் ரெயில்வே நிலையம் தெருவில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா, ஹான்ஸ் பொருட்களை விற்பனை செய்வதாக திருவாலங்காடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் அங்கு சோதனை மேற்கொண்டதில் 1 கிலோ 140 கிராம் எடையுள்ள ஹான்ஸ் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் பள்ளிப்பட்டு ஆர்.கே. பேட்டை பகுதிகளில் போலீசார் நேற்று முன்தினம் தீவிரமாக விசாரணை நடத்தினார்கள். அப்போது பள்ளிப்பட்டு தாலுகா பொதட்டூர்பேட்டையை சேர்ந்த வேலு (20), வெங்கடேசன் என்கிற அஜய் (20) சவுட்டூர் கிராமத்தை சேர்ந்த சரண் (20) ஆகிய 3 பேரை ஆர்.கே. பேட்டை போலீசார் கஞ்சா வைத்திருந்ததாக கைது செய்தனர். மேலும் பள்ளிப்பட்டு தாலுகா வாணி விலாசபுரம் கிராமத்தை சேர்ந்த நவீன்குமார் (21) பொதட்டூர் பேட்டையை சேர்ந்த பிரகாஷ் (22) ஆகிய இருவரை கஞ்சா வைத்திருந்ததாக பள்ளிப்பட்டு போலீசார் கைது செய்தனர். இதேபோல் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் நகரி அருகே கரகண்டாபுரம் காலனியை சேர்ந்த மணிகண்டன் (32) என்பவர் கஞ்சா வழக்கில் காருடன் கைது செய்யப்பட்டார்.
Related Tags :
Next Story