சட்டம்-ஒழுங்கை பாதுகாப்பதில் பசவராஜ் பொம்மை செயலிழந்து விட்டார்
சட்டம்-ஒழுங்கை பாதுகாப்பதில் பசவராஜ் பொம்மை செயலிழந்து விட்டார் என்று யு.டி.காதர் எம்.எல்.ஏ குற்றம் சாட்டியுள்ளார்.
மங்களூரு:
அமைதி, ஒற்றுமை
கர்நாடகத்தில் கடந்த சில மாதங்களாக ஒவ்வொரு பிரச்சினையாக தலை தூக்கி வருகிறது. இதற்கு பா.ஜனதா அரசுதான் காரணம் என்று காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது. இந்நிலையில் மங்களூரு அரசு விருந்தினர் மாளிகையில் நடைபெற்ற நிருபர்கள் சந்திப்பின் போது பேசிய யு.டி.காதர் எம்.எல்.ஏ. கூறியதாவது:-
கர்நாடகத்தில் கடந்த சில மாதங்களாக மத மோதல் ஏற்பட்டு வருகிறது. ஆனால் 95 சதவீதம் மக்கள் இதை விரும்பவில்லை. அமைதியாகவும், ஒற்றுமையாகவும் வாழவேண்டுமென்றே விரும்புகின்றனர். ஆனால் 5 சதவீத மக்கள் மட்டும் வன்முறையை விரும்புகின்றனர்.
அவர்களை சிலர் தூண்டிவிட்டு வேடிக்கை பார்த்து வருகின்றனர். மாநிலத்தில் எந்தவிதமான வளர்ச்சி திட்டப்பணிகளும் இல்லை. முதல்-மந்திரியும், அவரது நிர்வாகமும் தோல்வி அடைந்துவிட்டது. சட்டம்-ஒழுங்கை பாதுகாப்பதில் பசவராஜ் பொம்மை செயலிழந்து விட்டார். இதனால் வகுப்பு வாத சக்திகள் தலை தூக்க தொடங்கிவிட்டது. இதை மாநில அரசே ஊக்குவித்து வருகிறது.
விலைவாசி உயர்வு
மேலும் பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் சிலிண்டர் விலையும், அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது. இதனால் ஓட்டல் உணவுகள், டீ, காபி, வீட்டு உபயோகப்பொருட்கள், கட்டுமானப்பொருட்கள் என்று அனைத்து பொருட்களின் விலையும் உயர்த்தப்பட்டுவிட்டது.
இதனால் மக்கள் அனைவரும் பா.ஜனதா ஆட்சியின் மீது அதிருப்தியில் உள்ளனர். இதே நிலை தொடர்ந்து நீடித்தால் மக்கள் பொறுமையை இழந்துவிடுவார்கள். எனவே விலைவாசியை கட்டுப்படுத்துவதற்கு மாநில அரசு முக்கியதுவம் கொடுக்கவேண்டும். அதைவிட்டுவிட்டு மதவாத சக்திகளை தூண்டக்கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story