நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேறியதால் வேடசந்தூர் ஒன்றிய அ.தி.மு.க. தலைவர் பதவி இழப்பு
வேடசந்தூரில் நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேறியதால் அ.தி.மு.க.வை சேர்ந்த ஒன்றியக்குழு தலைவர் பதவி இழந்தார். அ.தி.மு.க. கவுன்சிலர்களே எதிராக வாக்களித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வேடசந்தூர்:
நம்பிக்கையில்லா தீர்மானம்
வேடசந்தூர் ஒன்றியத்தில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன. இதில் 8 வார்டுகளில் அ.தி.மு.க., 5 வார்டுகளில் தி.மு.க., தலா ஒரு வார்டில் தே.மு.தி.க., காங்கிரஸ் கவுன்சிலர்கள் இருந்தனர். இங்கு தே.மு.தி.க. ஆதரவுடன் அ.தி.மு.கவை சேர்ந்த சாவித்திரி சுப்பிரமணியன் ஒன்றியக்குழு தலைவராகவும், அ.தி.மு.க.வை சேர்ந்த சந்திராசவடமுத்து துணைத்தலைவராகவும் பதவி வகித்தனர்.
இந்தநிலையில் தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர அனுமதி கோரி பழனி ஆர்.டி.ஓ. சிவக்குமாரிடம் 12 கவுன்சிலர்கள் மனு கொடுத்தனர்.
தீர்மானம் நிறைவேறியது
இதையடுத்து இன்று வேடசந்தூர் ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக்குழு கூட்டம் நடந்தது. இதற்கு பழனி ஆர்.டி.ஓ. சிவக்குமார் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயலட்சுமி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் அனைத்து கவுன்சிலர்களும் பங்கேற்றனர்.
இதில் ஒன்றியக்குழு தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டு அதன் மீது வாக்கெடுப்பு நடந்தது. அப்போது அ.தி.மு.க., தி.மு.க., தே.மு.தி.க., காங்கிரஸ் கட்சிகளை சேர்ந்த 12 கவுன்சிலர்கள் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்புக்கு ஆதரவு தெரிவித்து கையை உயர்த்தினர். இதனால் தீர்மானம் நிறைவேறியது.
ஒன்றியக்குழு தலைவர் சாவித்திரிசுப்பிரமணி, துணைத்தலைவர் சந்திராசவடமுத்து, கவுன்சிலர் தேன்மொழிதங்கராஜ் ஆகியோர் மட்டும் தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவிக்கவில்லை.
போலீஸ் பாதுகாப்பு
பின்னர் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்த 12 கவுன்சிலர்களும் கூட்டம் முடிந்ததும் ஒன்றாக ஒரு வேனில் ஏறி சென்றனர். இதனிடையே ஒன்றிய அலுவலகத்தின் முன்பு வேடசந்தூர் தி.மு.க. வடக்கு ஒன்றிய செயலாளர் வீராசாமிநாதன், நகர செயலாளர் கார்த்திகேயன், தெற்கு ஒன்றிய செயலாளர் கவிதாபார்த்திபன், முன்னாள் மாவட்ட துணைச்செயலாளர் ஜீவா உள்பட தி.மு.க.வினர் திரளாக நின்று கொண்டு இருந்தனர். அவர்கள் நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேறியவுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்க என்று கோஷமிட்டனர்.
வேடசந்தூர் ஒன்றிய அலுவலக வளாகம் பதற்றமாக இருந்ததால் போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஷ் தலைமையில் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அ.தி.மு.க.வை சேர்ந்த ஒன்றியக்குழு தலைவருக்கு எதிராக அ.தி.மு.க. கவுன்சிலர்களே வாக்களித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Related Tags :
Next Story