சீர்காழி நகர்மன்ற கூட்டத்தில் இருந்து கவுன்சிலர்கள் வெளிநடப்பு


சீர்காழி நகர்மன்ற கூட்டத்தில் இருந்து கவுன்சிலர்கள் வெளிநடப்பு
x
தினத்தந்தி 11 April 2022 10:02 PM IST (Updated: 11 April 2022 10:02 PM IST)
t-max-icont-min-icon

சீர்காழி நகர்மன்ற கூட்டத்தில் இருந்து அ.தி.மு.க., தே.மு.தி.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்

சீர்காழி
சீர்காழி நகர்மன்ற கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு நகர் மன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி தலைமை தாங்கினார். ஆணையர் (பொறுப்பு) இப்ராகிம் முன்னிலை வகித்தார். எழுத்தர் ராஜகணேஷ் கூட்ட அஜண்டாவை படித்தார்.
2008-ம் ஆண்டுக்கு பிறகு தற்போது தமிழக அரசால் சொத்துவரி சீராய்வு செய்து அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சீர்காழி நகராட்சியில் வணிக பயன்பாடு, தொழிற்சாலை பயன்பாடு, வீடுகளுக்கான வரி உயர்வு குறித்து பட்டியலிட்டார்.
கூட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் சொத்து வரி உயர்வை கண்டித்து
அ.தி.மு.க. கவுன்சிலர்கள் ரமாமணி, கிருஷ்ணமூர்த்தி, கலைச்செல்வி, நாகரத்தினம் ஆகியோர் வெளிநடப்பு செய்தனர். அப்போது அவர்கள் தங்களது கழுத்தில் கருப்பு துண்டு அணிந்திருந்தனர். அவர்களை தொடர்ந்து தே.மு.தி.க. கவுன்சிலர் ராஜசேகரனும், அரசின் வரி உயர்வு நிலைப்பாட்டை கண்டித்து வெளிநடப்பு செய்தார்.
மறு பரிசீலனை
பின்னர் கூட்டத்தில் நடைபெற்ற விவாதம் வருமாறு:-
வேல்முருகன்(பா.ம.க.):- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது கொரோனா காலத்தில் மக்கள் வாழ்வாதாரத்திற்காக ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என குரல் கொடுத்தார். தற்போதைய வரி விதிப்பால் பொதுமக்களின் வாழ்வாதாரம் என்னவாகும். புதிய வரிவிதிப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
இதற்கு பதில் அளித்து துணைத்தலைவர் சுப்பராயன் (தி.மு.க.) பேசுகையில், கடந்த 2008-ம் ஆண்டுக்கு பிறகு வரிகள் உயர்த்தப்படவில்லை. வரி உயர்வு செய்தால் மட்டுமே நிதி உதவி தருவோம் என்று மத்திய அரசு கூறி வருகிறது. இதனால் வரிகளை உயர்த்த வேண்டிய நிலைக்கு மாநில அரசு தள்ளப்பட்டுள்ளது என்றார். பின்னர் 17 கவுன்சிலர்களின் ஒப்புதலோடு புதிய வரி உயர்வு தீர்மானம் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.
வைத்தீஸ்வரன் கோவில் பேரூராட்சி
இதேபோல, வைத்தீஸ்வரன்கோவில் பேரூராட்சி மன்ற கூட்டம், தலைவர் பூங்கொடி அலெக்சாண்டர் தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவர் அன்புச்செழியன் முன்னிலை வகித்தார். இளநிலை உதவியாளர் பாமா மன்ற பொருள்களை வாசித்தார். அதனைத்தொடர்ந்து தமிழக அரசு கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்த சொத்து வரி உயர்வு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் ராஜ கார்த்திகேயன், பிரியங்கா குபேந்திரன், மீனா குருசாமி ஆகிய 3 பேரும் வெளிநடப்பு செய்தனர். 
போக்குவரத்து நெரிசல்
தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் துணைத்தலைவர் அன்புசெழியன் பேசுகையில், வைத்தீஸ்வரன் கோவில் பகுதியில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் வைத்தீஸ்வரன் கோவில் இரட்டைப் பிள்ளையார் கோவில் முதல் பஸ் நிலையம் வரை உள்ள சாலையை சீரமைத்து ஒரு வழிப்பாதையாக அமைத்து தர வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்தார். 
இதனைத்தொடர்ந்து அனைத்து கவுன்சிலர்களும் தங்கள் பகுதியில் மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சி பணிகள் குறித்து பேசினர்.


Next Story