கறிக்கோழி வளர்ப்போர் திரண்டு முற்றுகை


கறிக்கோழி வளர்ப்போர் திரண்டு முற்றுகை
x
தினத்தந்தி 11 April 2022 10:29 PM IST (Updated: 11 April 2022 10:29 PM IST)
t-max-icont-min-icon

கறிக்கோழி வளர்ப்போர் திரண்டு முற்றுகை

பல்லடம்,
கறிக்கோழி வளர்ப்புக்கு கூலி உயர்வு கேட்டு பல்லடம் ஒருங்கிணைப்பு குழு அலுவலகத்தில் கறிக்கோழி வளர்ப்போர் திரண்டு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கொள்முதல் விலை
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த குழுவானது கறிக்கோழி இறைச்சி நுகர்வை அடிப்படையாக கொண்டு தினமும் கறிக்கோழி பண்ணை கொள்முதல் விலையை நிர்ணயம் செய்து அறிவித்து வருகிறது.
இதனை அடிப்படையாக கொண்டு தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் கறிக்கோழி விற்பனை விலை இருக்கும். கறிக்கோழி உற்பத்தியாளர்களுக்கு கோழிக்குஞ்சுகளை 42 நாட்கள் வளர்க்க ஒரு கிலோவிற்கு ரூ.7 முதல் ரூ.9 வரை வளர்ப்பு கூலி வழங்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
கூலி உயர்வு கேட்டு முற்றுகை
தமிழகத்தில் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட கறிக்கோழி வளர்ப்பு பண்ணைகள் உள்ளன. மின் கட்டண உயர்வு, தொழிலாளர் சம்பளம் அதிகரிப்பு, பராமரிப்பு செலவு ஆகியவற்றால் கறிக்கோழி வளர்ப்புக்கு கூடுதல் செலவு ஆவதால், கறிக்கோழி வளர்ப்போருக்கு கிலோ ஒன்றுக்கு ரூ.10 முதல் ரூ.15 வரை கறிக்கோழி நிறுவனங்கள் வழங்க வேண்டும். நன்றாக வளர்ந்த கோழி ஒன்றுக்கு போனசாக ரூ.5  வழங்க வேண்டும், 
பதிவு செய்த கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகள் சங்கத்தை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு கறிக்கோழி பண்ணை விவசாயிகள் ஒருங்கிணைப்பு நலச்சங்கம் சார்பில், திருப்பூர், திண்டுக்கல், மதுரை, தூத்துக்குடி, சிவகாசி, ஈரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த சுமார் 1,500-க்கும் மேற்பட்ட கறிக்கோழி வளர்ப்பவர்கள் பல்லடத்தில் உள்ள கறிக்கோழி ஒருங்கிணைப்பு கமிட்டி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஒரு வாரத்தில் முடிவு
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பல்லடம் போலீசார் அவர்களை ஒழுங்குபடுத்தினர். பின்னர் ஒருங்கிணைப்புக்குழு நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த கறிக்கோழி வளர்ப்போர் சங்க நிர்வாகிகளை அனுமதித்தனர்.
இதில் கறிக்கோழி வளர்ப்போர் சங்கம் தரப்பில் மாநில தலைவர் வெங்கடாசலம், செயலாளர் ரபீக், பொருளாளர் இருங்கோவேள் ஆகியோர் கலந்து கொண்டனர். கறிக்கோழி உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகி பழனிச்சாமி பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதில் இன்னும் ஒரு வார காலத்திற்குள் கறிக்கோழி உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் ஆலோசனை நடத்தி கூலி உயர்வு குறித்து முடிவு எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்று கறிக்கோழி வளர்ப்போர் அங்கிருந்து கலைந்து சென்றனர். 
இந்த போராட்டம் காரணமாக பல்லடம்- செட்டிபாளையம் ரோட்டில் சுமார் 1,500-க்கும் மேற்பட்டோர் திரண்டதால் அந்த சாலையில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

Next Story