வெயிலின் தாக்கம் அதிகரிப்பால் மண்பானை விற்பனை சூடுபிடித்தது


வெயிலின் தாக்கம் அதிகரிப்பால் மண்பானை  விற்பனை  சூடுபிடித்தது
x

வெயிலின் தாக்கம் அதிகரிப்பால் மண்பானை விற்பனை சூடுபிடித்தது

சேவூர், 
சேவூர் சுற்றுவட்டார பகுதிகளில் கோடை வெயிலின் தாக்கத்தால் குளிர்ந்த தண்ணீரை பருக மண்பானைக்கு பொதுமக்கள் மாறி வருகிறார்கள். அதனால் சேவூர் பகுதியில் மண்பானை விற்பனை சூடு பிடித்துள்ளது.
 வெயிலின் தாக்கம் அதிகரிப்பு
சேவூர் சுற்றுவட்டார பகுதிகளில் கோடை தொடங்குவதற்கு முன்பே வெயிலின் தாக்கம் அதிகரித்துவிட்டது. பகல் நேரங்களில் சூரியன் சுட்டெரிப்பதால் சேவூர் சுற்றுவட்டார பகுதி பொதுமக்கள் வெயிலின் தாக்கத்தால் கடும் அவதியடைந்து வருகிறார்கள். வெப்பம் அதிகம் காரணமாக நுங்கு, இளநீர், கம்மங்கூழ் விற்பனை கடைகளில் சூடு பிடித்துள்ளது. 
கோடைக்கு இதமான தர்பூசணி பழங்கள் விற்பனையும் சூடு பிடித்துள்ளது. இதனால் சாலையோரங்களில் தர்பூசணி பழக்கடைகள் அதிகமாக காண முடிகிறது. மற்றும் குளிர்பான கடையில் ஐஸ்கீரிம், பழங்களால் தயாரிக்கப்படும் ஜூஸ்களும் விற்பனை தற்போது அதிகரித்துள்ளது.
மண் பானை தண்ணீர்
இந்நிலையில் என்ன தான் கோடையை குளுமைப்படுத்துவதற்காக குளிர்பானங்கள் தயாரித்தாலும் கோடையில் மண்பானைத் தண்ணீரை குடிக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எண்ணம்.  கோடை வெயிலை சமாளிக்கும் வகையில் ஏழை, எளிய, நடுத்தர மக்களின் குளிர்சாதன பெட்டியாக திகழும் மண் பானைகள் விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது. 
பங்குனி, சித்திரை மாதங்களில் கடும் வெயில் காலமாக இருப்பதால் குளிர்ச்சியான தண்ணீரை குடிக்க வேண்டும் என்பதற்காகவும், மண்பானை தண்ணீர் குடிப்பதால் உடல் நலத்திற்கு எந்த விதமான நோய்களும் ஏற்படாது என்பதாலும் தற்போது இந்த மண்பானையை வாங்கி பயனடைகிறார்கள். 
மண்பானை விற்பனை
மின்சாரத்தால் குளுமைப்படுத்தி ஜூஸ் வகைகள் கிடைத்தாலும் அது உடல் நலத்திற்கு தீங்கு விளைவிப்பதால் இன்னும் சேவூர் கிராம பகுதியில் மண்பானை விற்பனை குறையவில்லை. இது மட்டுமல்லாது தற்போது சமையல் செய்வதற்கே எவர்சில்வர் பாத்திரங்கள், ஈயப்பாத்திரங்களை தற்போது பொதுமக்கள் தவிர்த்து மண் சட்டிகளை பயன்படுத்தி வருகிறார்கள். இந்த கோடை காலத்தில் 10 லிட்டர், 15 லிட்டர் அளவுகள் கொண்ட மண்பானைகள் விற்பனையாகி வருகிறது.
இது குறித்து மண்பானை விற்பனையாளர் கூறுகையில், இந்த வெயில் காலம் முடியும் வரை மண்பானை விற்பனை நன்றாக இருக்கும். பொதுமக்கள் எங்களிடம் வாங்கி செல்லும் போது மண்பானை தண்ணீரை குடித்தால் உடனடியாக தாகம் தீர்ந்து விடுகிறது. நல்ல குளிர்ச்சியாக இருப்பதாக சொல்வார்கள். அதனால் பழமை மாறாமல் எங்கள் மண்பானை விற்பனை இந்த மூன்று மாத காலத்திற்கு நன்றாக இருக்கும் என்றனர்.

Next Story