மோட்டார் சைக்கிளில் ஊர்வலம் செல்ல முயன்ற பா.ஜ.க.வினர். போலீசார் தடுத்து நிறுத்தினர்
வேலூரில் மோட்டார் சைக்கிளில் ஊர்வலம் செல்ல முயன்ற பா.ஜ.க.வினரை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
வேலூர்
பாரதீய ஜனதா கட்சி தொடங்கி 42-ம் ஆண்டையொட்டி அக்கட்சியின் சார்பில் சேவா வாரமாக 7 நாட்களுக்கு பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக வேலூர் மாவட்ட பா.ஜ.க. இளைஞரணி சார்பில் வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே இருந்து மோட்டார் சைக்கிளில் ஊர்வலம் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் இதற்கு சத்துவாச்சாரி போலீசார் அனுமதி அளிக்கவில்லை.
இந்த நிலையில் மாலை 4 மணி அளவில் பா.ஜ.க. நிர்வாகிகள் வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே மோட்டார் சைக்கிளுடன் வரத்தொடங்கினர்.
இதையடுத்து வேலூர் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சுந்தரமூர்த்தி தலைமையில் துணை போலீஸ் சூப்பிரண்டு பூபதிராஜன், இன்ஸ்பெக்டர்கள் உள்பட 20-க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு முன்எச்சரிக்கையாக குவிக்கப்பட்டனர்.
வேலூர் மாவட்ட இளைஞரணி தலைவர் சுரேஷ் தலைமையில் மாவட்ட தலைவர் தசரதன், துணைத்தலைவர் ஜெகன், பொதுச்செயலாளர் பாஸ்கர் மற்றும் பலர் மோட்டார் சைக்கிளில் பா.ஜ.க. கொடியை ஏந்தியபடி அங்கிருந்து ஊர்வலமாக செல்ல முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். ஊர்வலம் செல்வதற்கு அனுமதி இல்லை. அதையும்மீறி சென்றால் அனைவரும் கைது செய்யப்படுவார்கள். மேலும் மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டு கோர்ட்டில் ஒப்படைக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.
அதையடுத்து பா.ஜ.க.வினர் ஊர்வலத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story