உயிருடன் இருக்கும்போதே இறந்து விட்டதாக ரேஷன்கார்டில் பெயரை நீக்கி விட்டனர்


உயிருடன் இருக்கும்போதே இறந்து விட்டதாக ரேஷன்கார்டில் பெயரை நீக்கி விட்டனர்
x
தினத்தந்தி 11 April 2022 11:06 PM IST (Updated: 11 April 2022 11:06 PM IST)
t-max-icont-min-icon

உயிருடன் இருக்கும் மூதாட்டி இறந்து விட்டதாக கூறி ரேஷன்கார்டில் பெயர் நீக்கி விட்டதாக கலெக்டர் அலுவலகத்தில் மூதாட்டி அளித்த புகார் மனுவால் பரபரப்பு ஏற்பட்டது.

ராமநாதபுரம், 
உயிருடன் இருக்கும் மூதாட்டி இறந்து விட்டதாக கூறி ரேஷன்கார்டில் பெயர் நீக்கி விட்டதாக கலெக்டர் அலுவலகத்தில் மூதாட்டி அளித்த புகார் மனுவால் பரபரப்பு ஏற்பட்டது.
உயிருடன் இருக்கும் மூதாட்டி
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே உள்ள கடுகு சந்தை சத்திரம் பகுதியை சேர்ந்தவர் மகாலிங்கம். மின்வாரிய அதிகாரியான இவர் இறந்த நிலையில் அவரின் மனைவி மாரியம்மாள் (வயது66) பெயரில் ரேஷன்கார்டு இருந்து வந்துள்ளது. இந்தநிலையில் இவரின் ரேஷன்கார்டினை ஸ்மார்ட் கார்டாக மாற்றம் செய்யும்போது இவரின் பெயரை அதேபகுதியை சேர்ந்த மங்களேஸ்வரி என்பவரின் குடும்பத்தினரின் கார்டில் குடும்பத்தலைவியாக மாரியம்மாளை சேர்த்து மங்களேஸ்வரி உள்ளிட்டவர்களை உறுப்பினர்களாக்கி விட்டனர். இதனை அறிந்து அவர் தனது பெயரை நீக்கம் செய்து தருமாறும், தனது மகன் கார்டில் பெயர் சேர்த்து பதிவு செய்து உதவிடுமாறும் மனு செய்துள்ளார். 
ஆனால், அவரின் பெயரை நீக்கம் செய்வதற்கு பதிலாக இறந்துவிட்டார் என்று பதிவு செய்து அவரின் ஆதார் கார்டினை முடக்கி வைத்துவிட்டனர். நீக்கம் செய்துவிட்டோம் என்று கூறியதால் ராமநாதபுரத்தில் வந்து மகனின் கார்டில் பெயர் சேர்க்க வந்தபோது நீங்கள் உயிருடன் இருக்கிறீர்களா என்று ஆச்சர்யத்துடன் கேட்டு உள்ளனர். அப்போதுதான் தான் இறந்துவிட்ட செய்தி மாரியம்மாளுக்கே தெரிந்துள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் தனது பெயரை மகன் கார்டில் இணைத்தும், தனது ஆதார் கார்டினை மீண்டும் செயலாக்கத்திற்கு கொண்டு வரக் கோரியும் அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்துள்ளார். இந்நிலையில் நேற்று ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்திற்கு மாரியம்மாள் வந்து தான் உயிருடன் இருப்பதை உறுதிப்படுத்தி உதவிடுமாறு கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தார். அவரிடம் விசாரணை செய்த மாவட்ட வருவாய் அதிகாரி காமாட்சி கணேசன், இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி ரேஷன்கார்டில் பெயர் சேர்க்கவும், ஆதார் கார்டினை மீண்டும் வழங்கவும் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். 
பெயர் நீக்கம் செய்வதற்கு பதிலாக இறந்து விட்டார் என்று ரேஷன்கார்டில் பெயர்நீக்கம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story