5 பள்ளிகளில் சத்துணவு திட்டம் தொடக்கம்
கல்வராயன்மலையில் உள்ள 5 பள்ளிகளில் சத்துணவு திட்டம் நேற்று முதல் தொடங்கப்பட்டது.
கச்சிராயப்பாளையம்,
கள்ளகுறிச்சி மாவட்டம் கல்வராயன்மலையில் உள்ள குரும்பாலூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. கடந்த 2006-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த பள்ளியில் அப்பகுதியை சேர்ந்த சுமார் 30 மாணவர்கள் படித்து வருகின்றனர். பள்ளி தொடங்கப்பட்ட நாள் முதல் இந்த பள்ளியில் சத்துணவு திட்டம் செயல்படுத்தவில்லை. இதேபோல் ஆனைமடுவு, கருவேலம்பாடி, மோட்டாம்பட்டி., கெடார் ஆகிய கிராமஙகளில் உள்ள அரசு பள்ளிகளிலும் சத்துணவு திட்டம் செயல்படுத்தவில்லை.
இதனால் ஏழை எளிய மாணவர்களான இவர்கள் பெரும் சிரமம் அடைந்து வந்தனர். இதையடுத்து சத்துணவு திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்க வேண்டும் என மாணவர்களின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்தனர். இருப்பினும் நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்து வந்தது. இந்தநிலையில் இது தொடர்பான தகவலை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்திற்கு உதயசூரியன் எம்.எல்.ஏ. கொண்டு சென்றார்.
நடவடிக்கை
இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் குரும்பாலூர் உள்ளிட்ட பள்ளிகளில் சத்துணவு திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை மேற்கொண்டார். அதன்படி பள்ளிகளில் நேற்று முதல் சத்துணவு திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் நிகழ்ச்சி மேற்கண்ட பள்ளிகளில் நடைபெற்றது. இதற்கு ஒன்றியக்குழு தலைவர் சந்திரன் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் கு.அண்ணாதுரை, சத்துணவு திட்ட ஒன்றிய அலுவலர் அண்ணாதுரை மற்றும் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் பன்னீர்செல்வம் ஆகியோர் மதிய உணவு திட்டத்தை தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர்கள் குப்புசாமி, வேங்கோடு கிருஷ்ணன், மாவட்ட கவுன்சிலர் அலமேலு சின்னத்தம்பி ஊராட்சி மன்ற துணைத்தலைவர் ஏழுமலை, சத்துணவு திட்ட ஊழியர் உதயசூரியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். நேற்று முதல் நாள் என்பதால் மாணவர்களுக்கு மட்டன் பிரியாணி வழங்கப்பட்டது. பள்ளிகளில் மாணவர்களுக்கு சத்துணவு திட்டம் செயல்படுத்தப்பட்டைத தி.மு.க. வினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
Related Tags :
Next Story