சொத்து வரி உயர்வை எதிர்த்து அ.தி.மு.க., பா.ஜ.க வெளிநடப்பு


சொத்து வரி உயர்வை எதிர்த்து அ.தி.மு.க., பா.ஜ.க வெளிநடப்பு
x
தினத்தந்தி 11 April 2022 11:23 PM IST (Updated: 11 April 2022 11:23 PM IST)
t-max-icont-min-icon

போடி, பெரியகுளம், கம்பம், சின்னமனூர் ஆகிய நகராட்சிகளில் சொத்து வரி உயர்வை எதிர்த்து அ.தி.மு.க., பா.ஜ.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.

போடி: 


போடி நகராட்சி 
போடி நகராட்சி கூட்டம் நேற்று நடந்தது. இதற்கு நகராட்சி தலைவர் ராஜராஜேஸ்வரி சங்கர் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் அ.தி.மு.க., பாரதீய ஜனதா கவுன்சிலர்கள் சொத்து வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கருப்பு உடை அணிந்து வந்திருந்தனர். கூட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் சொத்து வரி உயர்வு குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 
அந்த தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க., பாரதீய ஜனதா கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர். பின்னர் அவர்கள் சொத்து வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து பதாகைகளுடன் நகராட்சி அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

அ.தி.மு.க. வெளிநடப்பு
இதேபோல் பெரியகுளம் நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி கூட்டம் நேற்று நடந்தது. இதற்கு தலைவர் சுமிதா சிவக்குமார் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் ராஜாமுகமது, ஆணையாளர் புனிதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கவுன்சிலர்கள் தங்களது வார்டுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து பேசினர். பின்னர் சொத்து வரி உயர்வு சம்பந்தமான தீர்மானம் கொண்டு வரப்பட்டது. 

அப்போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க. கவுன்சிலர் குழு தலைவர் சண்முகசுந்தரம் தலைமையில் அ.தி.மு.க கவுன்சிலர்கள் 7 பேரும் வெளிநடப்பு செய்தனர். அதனைத் தொடர்ந்து அ.ம.மு.க. கவுன்சிலர்கள் 2 பேரும், பா.ம.க. கவுன்சிலர் ஒருவரும் வெளிநடப்பு செய்தனர். இதனைத்தொடர்ந்து சொத்துவரி உயர்வு சம்பந்தமான தீர்மானம் உட்பட 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கம்பம் நகராட்சி கூட்டம்
கம்பம் நகராட்சி தலைவர் வனிதா நெப்போலியன் தலைமையில் நகராட்சி கூட்டம் அலுவலக கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் சொத்து வரி உயர்வை கண்டித்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் 7 பேரும் கோஷமிட்டபடி வெளிநடப்பு செய்தனர். பின்னர் நகராட்சி அலுவலகம் முன்பு கருப்பு துண்டு அணிந்து சொத்து வரி உயர்வை ரத்து செய்யகோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

இதைத்தொடர்ந்து சொத்துவரி உயர்வு குறித்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தக் கூட்டத்தில் நகராட்சி ஆணையர் பாலமுருகன், பொறியாளர் பன்னீர், நகராட்சி துணைத் தலைவர் சுனோதா செல்வகுமார், தி.மு.க. கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். 

சின்னமனூர்
சின்னமனூர் நகராட்சி அலுவலக கூட்டரங்கில் நகராட்சி கூட்டம் நடந்தது. இதற்கு நகராட்சி தலைவர் அய்யாம்மாள் ராமு தலைமை தாங்கினார். நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) ஜெயவேல், துணைத் தலைவர் முத்துக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், ஆணையாளர் (பொறுப்பு) சொத்து வரி உயர்வு குறித்து ஒரு  மனதாக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று கூறினார். இதற்கு, இந்திய கம்யூனிஸ்டு கவுன்சிலர் தமிழ் பெருமாள், சொத்துவரி உயர்வை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார். 

அப்போது அ.தி.மு.க கவுன்சிலர்கள் 6 பேர், பா.ஜ.க. கவுன்சிலர் ஒருவர் சொத்து வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும், தீர்மானம் நிறைவேற்றக் கூடாது என்று கோஷமிட்டனர். பின்னர் அவர்கள் வெளிநடப்பு செய்தனர். தொடர்ந்து அலுவலக வளாகத்தில் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். பின்பு அவர்கள் கலைந்து சென்றனர். இதைத்தொடர்ந்து சொத்து வரி உயர்வுக்கு ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூடலூர் நகராட்சி 
கூடலூர் நகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் நகராட்சி தலைவர் பத்மாவதி லோகந்துரை தலைமையில் சிறப்பு கூட்டம் நடைபெற்றது. நகராட்சி ஆணையாளர் சித்தார்த், மேலாளர் ஜெயந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணைத்தலைவர் காஞ்சனா மற்றும் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் 6 பேர் உள்பட 16 கவுன்சிலர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டனர். 

அ.தி.மு.க. கவுன்சிலர்கள் 2 பேர், தி.மு.க. கவுன்சிலர் ஒருவர் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. கூட்டத்தில் சொத்து வரி உயர்வு குறித்து தீர்மானத்துக்கு யாரும் எதிர்ப்பு மற்றும் வெளிநடப்பு செய்யவில்லை. இதனால் தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. 

Next Story