பொதுச்செயலாளர் நீக்க வழக்கில் தீர்ப்பு: அ.தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் பதவியில் இருந்து சசிகலா நீக்கப்பட்ட வழக்கில் கோர்ட்டு தீர்ப்பை வரவேற்று கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அ.தி.மு.க.வினர் இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர்.
கிருஷ்ணகிரி:
கோர்ட்டு தீர்ப்பு
அ.தி.மு.க. பொதுச்செயலாளராக இருந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மறைவிற்கு பின், கட்சி பொதுச்செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார். பின்னர் சொத்து குவிப்பு வழக்கில் சிறை சென்றார். அதனைத் தொடர்ந்து கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில், சசிகலா பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இதை எதிர்த்து சசிகலா தரப்பில் சென்னை மாவட்ட 4-வது கூடுதல் உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் நேற்று அளிக்கப்பட்ட தீர்ப்பில் சசிகலாவை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கியது செல்லும் என கோர்ட்டு தீர்ப்பளித்தது. இதையடுத்து கிருஷ்ணகிரி 5 ரோடு ரவுண்டானா அருகில் அ.தி.மு.க. நகர செயலாளர் கேசவன் தலைமையில் திரண்ட கட்சியினர் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்கள். இதில் மாவட்ட அவைத்தலைவர் காத்தவராயன், ஒன்றிய செயலாளர்கள் சோக்காடி ராஜன், கன்னியப்பன், மாவட்ட கவுன்சிலர் ஜெயா ஆஜி, மண்டல செயலாளர் ராஜசேகரன், நகர இலக்கிய அணி கோவிந்தராஜ், கவுன்சிலர்கள் அமுதா, எழிலரசி சரவணன், விஜயா மற்றும் கார்த்திக் பால்ராஜ், வேலன், ராஜ்குமார் வேதாஉள்பட பலர் கலந்து கொண்டனர்.
சூளகிரி-ஊத்தங்கரை
இதேபோன்று சூளகிரி மேற்கு மற்றும் கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். சூளகிரி ரவுண்டானா அருகே நடந்த நிகழ்ச்சிக்கு, மேற்கு ஒன்றிய செயலாளரும், மாவட்ட கவுன்சிலருமான பாபு என்ற வெங்கடாசலம், கிழக்கு ஒன்றிய செயலாளர் பாலசுப்பிரமணி ஆகியோர் தலைமை தாங்கி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.
ஊத்தங்கரை 4 ரோடு அருகில் ஒன்றிய, நகர அ.தி.மு.க. சார்பில் கட்சி நிர்வாகிகள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். ஒன்றிய செயலாளர் தேவேந்திரன் (தெற்கு) தலைமையில் நிர்வாகிகள் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர்.
Related Tags :
Next Story