தாசில்தாரை தாக்கிய நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வருவாய்த்துறை பணியாளர்கள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டம்


தாசில்தாரை தாக்கிய நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வருவாய்த்துறை பணியாளர்கள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டம்
x
தினத்தந்தி 11 April 2022 11:26 PM IST (Updated: 11 April 2022 11:26 PM IST)
t-max-icont-min-icon

தாசில்தாரை தாக்கிய நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வருவாய்த்துறை பணியாளர்கள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டம்

நாமக்கல்:
ராசிபுரம் தாசில்தாரை தாக்கிய நபர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நேற்று நாமக்கல் மாவட்டத்தில் வருவாய்த்துறை பணியாளர்கள் 980 பேர் ஒட்டுமொத்த தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தாசில்தார் மீது தாக்குதல்
தி.மு.க. பிரமுகர் வனிதா செங்கோட்டையன். இவருடைய மகன் இளஞ்செழியன், வக்கீல் குமார் ஆகியோர் மண் கடத்தப்படுவது சம்பந்தமாக கடந்த 2-ந் தேதி ராசிபுரம் தாசில்தாரிடம் புகார் அளிக்க சென்றனர். அப்போது அங்கு ஏற்பட்ட வாக்குவாதத்தில் தாசில்தார் கார்த்திகேயனை வக்கீல் குமார் தாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து கைது செய்யப்பட்ட வக்கீல் குமார், பின்னர் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
இந்த நிலையில் தாசில்தார் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து வருவாய்த்துறை அலுவலர்கள் கடந்த 4-ந் தேதி நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர். இதற்கிடையே நாமக்கல் மாவட்ட வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு ஆலோசனை கூட்டம் மாவட்ட பொறுப்பாளர்கள் தமிழ்மணி, ஆனந்தன் ஆகியோர் தலைமையில் நடந்தது.
980 பேர் பங்கேற்பு
இந்த கூட்டத்தில் வக்கீல் குமார் உள்ளிட்ட 3 பேர் மீதும் சட்டரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்க அரசின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டு வருவாய்த்துறை பணியாளர்கள் அனைவரும் 11-ந் தேதி ஒட்டுமொத்த தற்செயல் விடுப்பு போராட்டத்தில் ஈடுபடுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி நேற்று நாமக்கல் மாவட்டத்தில் கிராம உதவியாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் முதல் தாசில்தார் வரை தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் வருவாய்த்துறையில் பணியாற்றும் சுமார் 980 பேர் கலந்து கொண்டதாக சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.
இதனால் நாமக்கல், ராசிபுரம் உள்ளிட்ட அனைத்து தாசில்தார் அலுவலகங்களும் நேற்று பணியாளர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. இதனால் வருவாய்த்துறை மூலம் வழங்கப்படும் சான்றிதழ் கேட்டு வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

Next Story