கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்


கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்
x

கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பெரம்பலூர்
கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்ட பா.ஜ.க. தலைவர் செல்வராஜ் தலைமையில், அக்கட்சியினர் நேற்று காலை பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது அவர்கள் கூறுகையில், மாவட்டத்தில் இயங்கும் தனியார் டயர் தொழிற்சாலையினால் பொதுமக்களுக்கும், விவசாயிகளுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. பெரம்பலூர் மாவட்டத்திற்கு மாசு கட்டுப்பாடு நிலையம் தனியாக  நிறுவ வேண்டும். பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். பாதாள சாக்கடை நீரை சுத்திகரிப்பு செய்யாமல் நெடுவாசலில் உள்ள நீர்நிலைகளில் திறந்து விடுவதால் நிலத்தடி நீர் மாசடைகிறது. மேலும் அங்கு குப்பைகளை தரம் பிரிக்காமல் எரிப்பதால் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது. மாவட்டத்தில் கல்குவாரி ஏலம் முடிந்தும் சில குவாரிகள் தொடர்ந்து இயங்கி கொண்டிருக்கிறது. மேலும் அனுமதிக்கப்பட்ட அளவை காட்டிலும் அதிக அளவு ஆழம் தோண்டப்படுகிறது. அனுமதிக்கப்பட்டஅளவை விட குவாரியில் அதிக அளவு வெடி பொருட்கள் பயன்படுத்தப்படுகிறது. அனுமதியின்றி சுண்ணாம்பு கல் தோண்டி எடுக்கப்பட்டு தனியார் நிறுவனத்திற்கு எடுத்து செல்கிறார்கள். இதனை ஆய்வு செய்ய தனிக்குழு அமைக்க வேண்டும், என்றனர். மேலும் அவர்கள் மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர். பின்னர் அவர்கள் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியாவை சந்தித்து மனு கொடுத்து விட்டு கலைந்து சென்றனர். அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக 70 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Next Story