கீரமங்கலத்தில் மாநில அளவிலான கைப்பந்து போட்டி: எஸ்.ஆர்.எம். - ஐ.சி.எப். அணிகள் வெற்றி முதல் பரிசை பெற்றன


கீரமங்கலத்தில் மாநில அளவிலான கைப்பந்து போட்டி:  எஸ்.ஆர்.எம். - ஐ.சி.எப். அணிகள் வெற்றி  முதல் பரிசை பெற்றன
x
தினத்தந்தி 11 April 2022 6:05 PM GMT (Updated: 2022-04-11T23:35:34+05:30)

கீரமங்கலத்தில் நடைபெற்ற மாநில அளவிலான கைப்பந்து போட்டிகளில் ஆண்கள் பிரிவில் எஸ்.ஆர்.எம். அணியும், பெண்களுக்கான பிரிவில் ஐ.சி.எப். அணியும் வெற்றி பெற்று முதல் பரிசை பெற்றன.

கீரமங்கலம்:
கைப்பந்து போட்டி
புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம்-வேம்பங்குடி மேற்கு கைப்பந்துக் கழகம் சார்பில் 6-வது ஆண்டாக மாநில அளவிலான ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கைப்பந்து போட்டி கீரமங்கலம் அருகே வேம்பங்குடி கலைவாணர் திடலில் நடந்தது. முதல் நாள் போட்டியை மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தொடங்கி வைத்தார். இரண்டாம் நாள் போட்டிகளை அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். போட்டிகள் 3 நாட்கள் இரவில் நடந்தது. இரண்டாவது மற்றும் 3-வது நாட்களில் கனமழை பெய்த போதும் விழாக்குழுவினர் விளையாட்டுத் திடலில் இருந்த தண்ணீரை அகற்றி மைதானத்தை தயார் செய்து போட்டிகளை நடத்தினார்கள்.
பரிசுகளும், பாராட்டும்...
நேற்று  இரவு இறுதி போட்டிகள் நடந்தது. போட்டிகள் முடிவில் ஆண்கள் பிரிவில் முதல் பரிசு மற்றும் சுழற்கோப்பையை சென்னை எஸ்.ஆர்.எம். அணியும், 2-வது பரிசை தமிழ்நாடு போலீஸ் அணியும், 3-வது பரிசை சென்னை ஐ.சி.எப். அணியும், 4-வது பரிசை சென்னை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அணியும் பெற்றனர். 
இதேபோல பெண்கள் பிரிவில் முதல் பரிசு மற்றும் சுழற்கோப்பையை சென்னை ஐ.சி.எப். அணியும், 2-வது பரிசை ஈரோடு பி.கே.ஆர். அணியும், 3- வது பரிசை சென்னை சிவந்தி கிளப் அணியும், 4-வது பரிசை சென்னை எஸ்.ஆர்.எம். அணியும் பெற்றனர். தொடர் மழையிலும் தொடர்ந்து விளையாடி ரசிகர்களை உற்சாகப்படுத்திய விளையாட்டு வீரர், வீராங்கனைகளை விழாக்குழுவினர், சிறப்பு விருந்தினர்கள், ரசிகர்கள் பாராட்டினார்கள். விளையாட்டு போட்டிகளை சிவகுருநாதன் மற்றும் சரவணன் ஒருங்கிணைப்பு செய்தனர்.

Next Story