ரூ.1 லட்சம் கொடுத்தால், வாரம் ரூ.5 ஆயிரம் வட்டி; பெண்களிடம் நூதன முறையில் ரூ.13 லட்சம் மோசடி
சென்னை பெரம்பூரில் ரூ.1 லட்சம் கொடுத்தால், வாரம் ரூ.5 ஆயிரம் வட்டி என பெண்களிடம் நூதன முறையில் ரூ.13 லட்சம் மோசடி செய்ததாக போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பெண் ஒருவர் புகார் அளித்தார்.
சென்னை,
சென்னை பெரம்பூர், நெல்வயல் சாலை பகுதியைச் சேர்ந்தவர் சாந்தி (வயது 31). இவர் உள்பட ஏராளமான பேர், நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தனர். சாந்தி கொடுத்த புகார் மனுவில் கூறி இருப்பதாவது:-
நான் வசிக்கும் பகுதியில் எனது கணவருடன் சேர்ந்து பூ மொத்த வியாபார கடை நடத்தி வருகிறேன். எங்கள் பகுதியில் வசிக்கும் பெண் ஒருவர் நூதனமான ஆசைகாட்டி எங்களிடம் பணம் வசூலித்தார். அந்த பெண்ணிடம் ரூ.1 லட்சம் கொடுத்தால், அதற்கு வாரம் தோறும் வட்டியாக மட்டும், ரூ.5 ஆயிரம் திருப்பிக்கொடுக்கப்படும் என்று அறிவித்தார். அதை நம்பி நான் உள்பட ஏராளமான பேர் லட்சக்கணக்கில் அந்த பெண்ணிடம் பணமாக கொடுத்தோம். நான், எனது தாயார் சேர்ந்து நகையை விற்றும், சேமிப்பு பணத்தையும் சேர்த்து ரூ.13 லட்சம் அந்த பெண்ணிடம் கொடுத்தோம்.
இந்த பணத்துக்கு 3 வாரங்கள் மட்டும் அவர்கள் சொன்னபடி வட்டிபணம் கொடுத்தார்கள். அதன்பிறகு வட்டி பணம் கொடுப்பதை நிறுத்தி விட்டார். என்னைப்போன்ற ஏராளமானோர் கொடுத்த மொத்த பணத்தையும் சுருட்டிக்கொண்டு அந்த பெண் தலைமறைவாகிவிட்டார். அந்த பெண் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story