மும்பை நகை வியாபார அலுவலகத்தில் பாதாள அறையில் பதுக்கப்பட்ட ரூ.10 கோடி ரொக்கம், 19 கிலோ வெள்ளி- ஜி.எஸ்.டி. அதிகாரிகள் சோதனையில் சிக்கியது


பறிமுதல் செய்யப்பட்ட பணக்கட்டுகள். வெள்ளி கட்டிகளை படத்தில் காணலாம்.
x
பறிமுதல் செய்யப்பட்ட பணக்கட்டுகள். வெள்ளி கட்டிகளை படத்தில் காணலாம்.
தினத்தந்தி 23 April 2022 6:35 PM IST (Updated: 23 April 2022 6:35 PM IST)
t-max-icont-min-icon

மும்பையில் நகை வியாபார அலுவலகத்தில் ஜி.எஸ்.டி. அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் பாதாள அறையில் பதுக்கப்பட்ட ரூ.10 கோடி ரொக்கம், 19 கிலோ வெள்ளி சிக்கியது.

மும்பை, 
மும்பையில் நகை வியாபார அலுவலகத்தில் ஜி.எஸ்.டி. அதிகாரிகள் நடத்திய  அதிரடி சோதனையில் பாதாள அறையில் பதுக்கப்பட்ட ரூ.10 கோடி ரொக்கம், 19 கிலோ வெள்ளி சிக்கியது.  
பாதாள அறை
மும்பையில் சாமுன்டா என்ற நகை வியாபார நிறுவனத்தின் நிகர வருவாய் கடந்த 3 ஆண்டுகளில் ரூ.23 லட்சத்தில் இருந்து ரூ.1,764 கோடியாக உயர்ந்து இருப்பதை ஜி.எஸ்.டி. அதிகாரிகள் கவனித்தனர். மேலும் அந்த நிறுவனத்தின் சமீபத்திய பணபரிவர்த்தனை ஜி.எஸ்.டி. அதிகாரிகளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து அதிகாரிகள் கடந்த சில நாட்களுக்கு முன் அந்த நிறுவனத்திற்கு சொந்தமான மும்பையில் உள்ள 3 இடங்களில் சோதனை நடத்தினர். 
இந்த சோதனை கல்பாதேவி பகுதியில் உள்ள நிறுவனத்தின் 35 சதுர அடி அலுவலகத்திலும் நடந்தது. சல்லடை போட்டு தேடியும் அந்த சிறிய அலுவலகத்தில் அதிகாரிகளுக்கு சந்தேகத்திற்கு இடமாக எதுவும் கிடைக்கவில்லை.
இந்தநிலையில் அறையின் ஓரத்தில் பதிக்கப்பட்டு இருந்த டைல்ஸ் கல் அதிகாரிகளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து அவர்கள் அந்த டைல்ஸ் கல்லை அகற்றினர். அப்போது அதற்குள் சிறிய பாதாள அறை இருந்தது. மேலும் அதற்குள் மூட்டை, மூட்டையாக பணம் இருந்ததை பார்த்து அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் 19 கிலோ வெள்ளி கட்டிகளும் இருந்தது.
வருமான வரித்துறை பறிமுதல்
இந்த பணம், வெள்ளி குறித்து தங்களுக்கு தெரியாது என நகை நிறுவன உரிமையாளர் கூறினார். இதையடுத்து அதிகாரிகள் அந்த அலுவலகத்திற்கு சீல் வைத்தனர். மேலும் வருமான வரித்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து வருமான வரித்துறை, சரக்கு சேவை வரித்துறையினர் இணைந்து அங்கு சோதனை நடத்தினர். அப்போது அலுவலக சுவரில் ரகசிய அலமாரி கண்டுபிடிக்கப்பட்டது. அதில் இருந்தும் பணப்பை எடுக்கப்பட்டது. இதையடுத்து அலுவலகத்தில் இருந்து எடுக்கப்பட்ட குவியல், குவியலான பணத்தை வருமான வரித்துறையினர் எண்ணி முடிக்கவே 6 மணி நேரம் ஆனது. முடிவில் அலுவலகத்தில் கிடைத்த ரூ.9 கோடியே 80 லட்சம் ரொக்கம், ரூ.13 லட்சம் வெள்ளி கட்டிகளை வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்தனர். அவர்கள் இந்த பணம், வெள்ளி எப்படி வந்தது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 மும்பையில் நகை வியாபார நிறுவன அலுவலகத்தில் இருந்து ரூ.10 கோடி பணம் மற்றும் வெள்ளி பாதாள அறையில் இருந்து மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



Next Story