ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும்; அன்புமணி ராமதாஸ் எம்.பி. பேட்டி
ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே சட்டம் இயற்ற வேண்டும்’ என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. தெரிவித்தார்.
திருவண்ணாமலை
ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே சட்டம் இயற்ற வேண்டும்’ என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. தெரிவித்தார்.
பா.ம.க. பொதுக்குழு கூட்டம்
திருவண்ணாமலை தெற்கு மற்றும் மேற்கு ஒருங்கிணைந்த மாவட்ட பா.ம.க. பொதுக்குழு கூட்டம் திருவண்ணாமலை வேங்கிக்காலில் உள்ள குமரன் மகாலில் நடைபெற்றது. கூட்டத்துக்கு திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளர் ஏந்தல் பெ.பக்தவச்சலம் தலைமை தாங்கினார். முன்னாள் மாநில துணை செயலாளர்கள் அ.வே.பிரசாத், இரா.காளிதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளர் இல.பாண்டியன் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக பா.ம.க. மாநில இளைஞர் அணி தலைவரும், முன்னாள் மத்திய சுகாதாரத்துறை மந்திரியுமான அன்புமணி ராமதாஸ் எம்.பி. கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
ஒரு காலத்தில் திருவண்ணாமலை மாவட்டம் விழுப்புரம் மாவட்டத்தை விட அதிக பலத்துடன் இருந்த மாவட்டம். இன்று 25 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த உற்சாகம் மீண்டும் வரும் என்று எனக்கு நம்பிக்கை வந்துள்ளது.
இந்த மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிக்கும் கிராமம் வாரியாக நான் வர இருக்கிறேன். முன்னாள், இன்னாள் நிர்வாகிகள் அனைவரும் ஒன்றிணைந்து திருவண்ணாமலை மாவட்டத்தில் பா.ம.க. முதன்மை கட்சி என்ற நிலைக்கு கொண்டுவர வேண்டும்.
தலைவர் ராமதாஸ் 42 ஆண்டுகள் பொது வாழ்வில் ஈடுபட்டு லட்சக்கணக்கான மக்களை திரட்டி பல கட்ட போராட்டங்களை நடத்தி தமிழகத்திற்கான உரிமைகளை மீட்டு தந்துள்ளார். ஆட்சிக்கு வராமலேயே தமிழகத்தில் பல சாதனைகளை செய்து உள்ளோம். நமக்கு மட்டும் ஒருமுறை ஆட்சி அதிகாரம் கொடுத்தால் தமிழகத்தில் உள்ள 80 சதவீத பிரச்சினைகளை 5 ஆண்டு காலங்களில் தீர்த்து வைத்து விடலாம்.
நந்தன் கால்வாய் திட்டம்
பொதுமக்கள் இடையே நமக்கு நல்ல பெயர் உள்ளது. அது வாக்குகளாக மாற்ற வேண்டும். திருவண்ணாமலை மாவட்டம் தொழில் வசதி, வேலை வாய்ப்பு என எதுவுமே இல்லாத மாவட்டம். நந்தன் கால்வாய் திட்டம், தென்பெண்ணையாறு-பாலாறு இணைப்பு திட்டம் போன்ற நீா்பாசன திட்டங்களை முதன் முறையில் சொன்னது பா.ம.க., அந்த திட்டங்களை கொண்டு வரும் வரை பாடுபடுவோம்.
திருவண்ணாமலை மாவட்டத்திற்கு சிப்காட், தொழிற்சாலைகள் வேண்டும். ஆனால் விவசாய நிலங்களை அழித்து கொண்டு வரும் சிப்காட், தொழிற்சாலைகள் எங்களுக்கு வேண்டாம். அரசு தரிசு நிலங்களை கண்டறிந்து அங்கு சிப்காட் கொண்டு வர வேண்டும். அரசாங்கம் இதையெல்லாம் கவனித்து திருவண்ணாமலை மாவட்டத்தில் தொழில் வளம் கொண்டுவர வேண்டும். விவசாயத்தை மேம்படுத்த வேண்டும்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் பா.ம.க. கொடி பறக்க வேண்டும். நாம் யாருக்கும் எதிரி அல்ல. எல்லா மத, இன மக்கள் நமக்கு வேண்டும். அதனால் யாரும் எங்கும் பிரச்சினைகள் செய்ய வேண்டாம். அதேவேளையில் உங்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் அன்புமணி சும்மா இருக்கமாட்டான்.
பி.எம்.கே. 2.0
கூட்டுறவு சங்கங்களில் யூரியா வழங்கும் போது கூடுதல் பொருட்கள் வாங்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துகின்றனர். இதனை உடனடியாக நிறுத்தி கொள்ள வேண்டும். இல்லையென்றால் திருவண்ணாமலை மாவட்டத்தில் மிகப்பெரிய போராட்டம் நடைபெறும்.
10.5 சதவீத இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டு உள்ளது. விரைவில் அது 100 சதவீதம் நமக்கு கிடைக்கும். நாயுடுமங்கலத்தில் அகற்றப்பட்ட அக்னி குண்டத்திற்கு பதில் புதிய அக்னி குண்டம் தயார் செய்யுங்கள். நானே வந்து வைக்கிறேன்.
55 ஆண்டு காலம் தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகள் மட்டும் ஆட்சி செய்து வருகிறது. இதனால் மக்கள் ஆட்சி மாற்றம் வராதா, புதிய திட்டங்கள் வராதா என்று எதிர்ப்பார்ப்பில் உள்ளனர்.
இனி நாம் செய்ய போற புதிய அரசியலின் பி.எம்.கே. 2.0. இதன் மூலம் புதிய திட்டங்கள், புதிய அரசியல், புதிய மாற்றங்களை உருவாக்குவோம். தமிழகத்தில் பா.ம.க. முதன்மை கட்சியாக மாற்ற அனைவரும் பாடுபடுவோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் மாநில இளைஞர் சங்க செயலாளர் கங்காதரன், மாநில மகளிர் அணி கஸ்தூரி, திருவண்ணாமலை மேற்கு மாவட்ட செயலாளர் பரமசிவம், முன்னாள் மாவட்ட பொருளாளர் வீரம்மாள் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். முடிவில் நகர செயலாளர் பத்மநாபநாயுடு நன்றி கூறினார்.
பூரண மதுவிலக்கு
அதைத் தொடர்ந்து பா.ம.க. மாநில இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் மிகவும் பின்தங்கிய மாவட்டம் திருவண்ணாமலை. இங்கு குடிநீர் பிரச்சினை மிக பெரிய அளவில் உள்ளது. இங்கு வேலை வாய்ப்பை உருவாக்க சிப்காட் அமைக்க வேண்டும். ஆனால் அது விவசாய நிலத்தில் அமைக்கக்கூடாது.
செஞ்சியில் இருந்து திருவண்ணாமலைக்கு வரும் சாலை மிகவும் மோசமாக உள்ளது. இந்த சாலையை சீரமைக்க வேண்டும். நீட் தேர்வு குறித்து மாணவர்கள் குழப்பத்தில் உள்ளனர். இதற்கு உடனடியாக கவர்னர் தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டமசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்பி தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு கொடுக்க வேண்டும். கவர்னர் இதில் இன்னும் தாமதம் செய்யக்கூடாது.
ஆன்லைன் சூதாட்டம் தற்போது மிக பெரிய பிரச்சினையாக உள்ளது. இதனால் தற்கொலை, கொலை நடக்கிறது. நடக்கும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே தமிழக அரசு புதிதாக சட்டம் கொண்டு வந்து இதை தடை செய்ய வேண்டும்.
தமிழகத்தில் மின்வெட்டை தவிர்க்க சோலார் திட்டத்தை அதிகப்படுத்த வேண்டும். பொது தேர்வு விரைவில் நடைபெற உள்ளதால் மின்வெட்டால் பள்ளி மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாமல் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 5 ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பூரண மதுவிலக்கு அமல்படுத்துவோம் என்றார்.
இப்போது தமிழக அரசின் நிலை என்ன? பூரண மதுவிலக்கு கொள்கையை ஏற்று படிப்படியாக கடைகளை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும். அடுத்த தலைமுறையை காப்பாற்ற அரசு மதுபான கடைகளை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாயுடுமங்கலத்தில் அகற்றப்பட்ட அக்னி கலசத்தை மீண்டும் அமைக்கவில்லை. நாங்கள் அமைப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story