கோடநாடு வழக்கு விசாரணை ஜூன் 24-ந் தேதிக்கு ஒத்திவைப்பு
ஊட்டி கோர்ட்டில் கோடநாடு வழக்கு விசாரணை ஜூன் 24-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
ஊட்டி
ஊட்டி கோர்ட்டில் கோடநாடு வழக்கு விசாரணை ஜூன் 24-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
கோடநாடு வழக்கு
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24-ந் தேதி காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டார். மேலும் எஸ்டேட் பங்களாவில் இருந்த பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக கோத்தகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தினர். தொடர்ந்து சயான், வாளையாறு மனோஜ், சந்தோஷ் சாமி, தீபு, சதீசன், உதயகுமார், ஜித்தின் ராய், சம்சீர் அலி, மனோஜ் சாமி, குட்டி என்ற பிஜின் ஆகியோரை கைது செய்தனர். இந்த வழக்கு ஊட்டி கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.
தற்போது கோடநாடு வழக்கு விசாரணை தீவிரமடைந்து உள்ளது. மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. சுதாகர், கோவை சரக டி.ஐ.ஜி. முத்துசாமி ஆகியோரது நேரடி மேற்பார்வையில் தனிப்படை போலீசார், முக்கிய பிரமுகர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒத்தி வைப்பு
இந்தநிலையில் ஊட்டி கோர்ட்டில் கோடநாடு வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கில் முக்கிய குற்றவாளிகளாக கூறப்படும் சயான், வாளையாறு மனோஜ் ஆகியோர் நேரில் ஆஜராகினர். அரசு தரப்பில் வக்கீல்கள் ஷாஜகான், கனகராஜ் ஆகியோர் ஆஜராகினர். பின்னர் வழக்கு தொடர்பாக மேலும் பலரிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது, எனவே கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என்று அரசு தரப்பில் கேட்கப்பட்டது.
இதையடுத்து கோடநாடு வழக்கை வருகிற ஜூன் மாதம் 24-ந் தேதிக்கு நீதிபதி ஸ்ரீதர் ஒத்திவைத்து உத்தரவிட்டார். பின்னர் அரசு வக்கீல் ஷாஜகான் நிருபர்களிடம் கூறியதாவது:-
220 பேரிடம் விசாரணை
கோடநாடு வழக்கு தொடர்பாக 220 பேரிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர். வழக்கு விசாரணை தற்போது முக்கிய கட்டத்தில் இருக்கிறது. மேலும் பல முக்கிய நபர்களிடம் விசாரணை நடத்த வேண்டி உள்ளது.
குற்றம் சாட்டப்பட்டு உள்ள நபர்கள் சிலர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருப்பதால், கால அவகாசம் கேட்கப்பட்டது. இதன் அடிப்படையில் வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story