மாநில கல்வி கொள்கையில் தமிழக அரசு உறுதியாக உள்ளதாக கோவையில் நடந்த ஆய்வு கூட்டத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்
மாநில கல்வி கொள்கையில் தமிழக அரசு உறுதியாக உள்ளதாக கோவையில் நடந்த ஆய்வு கூட்டத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்
கோவை
மாநில கல்வி கொள்கையில் தமிழக அரசு உறுதியாக உள்ளதாக கோவையில் நடந்த ஆய்வு கூட்டத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.
மண்டல ஆய்வு கூட்டம்
பள்ளிக்கல்வித்துறை சார்பில் கோவை, நீலகிரி, திருப்பூர், கரூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களை கொண்ட மண்டல அளவிலான ஆய்வுக்கூட்டம் கோவை பீளமேடு பி.எஸ்.ஜி. பொறியியல் கல்லூரியில் நேற்று நடைபெற்றது.
இதற்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமை தாங்கினார். அதைத்தொடர்ந்து அவர் கோவை மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்ட கனவு மெய்ப்பட வேண்டும் என்ற திட்டத்தை தொடங்கி வைத்தார்.
கூட்டத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியதாவது:-
ஆய்வு செய்ய வேண்டும்
அரசியல் பார்க்க கூடாத துறையாக கல்வித்துறை உள்ளது. பல துறைகளின் கருத்துகள் எங்களுக்கு தேவை.
வருங்காலத்தை உரு வாக்கும் துறை என்பதால் மற்ற துறைகளுக்கு இல்லாத பெருமை நமது கல்வித்துறைக்கு உள்ளது. சட்டமன்ற வரலாற்றிலேயே ரூ.35 ஆயிரத்து 895 கோடியை கல்வித்துறைக்கு முதல்-அமைச்சர் ஒதுக்கி உள்ளார்.
கல்வியும், சுகாதாரமும் எனது 2 கண்கள் என்று முதல்-அமைச்சர் சொல்வது வார்த்தை அல்ல.
கல்வித்துறை அதிகாரிகள் அலுவலகத்தில் இருக்காமல் அவ்வப் போது ஆய்வு செய்ய வேண்டும்.
ஒவ்வொரு பள்ளிக்கூடங்களும் தன்னிறைவு பெற்ற பள்ளிகளாக மாற வேண்டும். பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் பதற்றத்தை போக்க வேண்டும். வினாத்தாள்களை பாதுகாப்பாக வைத்து இருக்க வேண்டும்.
புத்தகம் வாசிப்பு
மாணவ-மாணவிகளிடம் புத்தகம் வாசிப்பு திறனை அதிகரிக்க செய்ய வேண்டும்.
நம் கோவை என்ற திட்டத்தை கோவை கலெக்டர் செயல்படுத்தி வருகிறார்.
தொடக்கப்பள்ளியில் அதிகளவு கவனம் செலுத்த வேண்டும். இல்லம் தேடி கல்வி திட்டம் சிறப்பாக உள்ளது.
மாணவர்களின் எதிர்காலத்தை மனதில் வைத்து செயலாற்ற வேண்டும்.
அசம்பாவித சம்பவங்களை தவிர்க்க பழமையான கட்டிடங்கள் அகற்றப்பட்டு வருகின்றன.
இதை காரணம் காட்டி மாணவர்க ளை மரத்தடிகளில் வைத்து பாடம் நடத்த வேண்டாம்.
திருமண மண்டபத்தை கூட வாடகைக்கு எடுத்தும் வகுப்பு நடத்தலாம்.
அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்து உள்ளது. பள்ளிக்கல்வி இணைதள குளறுபடிகள் சரிசெய்யப்படும்.
கல்வியில் சிறந்து விளங்கி புது தமிழகத்தை உருவாக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
அதைத்தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி கூறியதாவது
மாநில கல்வி கொள்கை
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பள்ளிக்கல்வித்துறைக்கு இல்லம் தேடி கல்வி, நான் முதல்வன் என பல்வேறு திட்டங்க ளை வழங்கி வருகிறார். தமிழகத்தில் 12,300 வகுப்பறை கட்டிடங்கள் இடிக்கும் தருவாயில் உள்ளன.
விரைவில் அந்த பள்ளிகள் இடிக்கப்பட்டு கட்டிடம் கட்டப்படும். மேலும் பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் அடுத்த 5 ஆண்டில் ரூ.7 ஆயிரம் கோடி ஒதுக்கப்படும். முதல் ஆண்டு ரூ.1500 கோடி ஒதுக்கப்படும் என்று முதல்-அமைச்சர் கூறி உள்ளார்.
சிறு தவறு நடந்தாலும் முதல்-அமைச்சர் இரும்புக்கரம் கொண்டு அடக்கி வருகிறார். தமிழகத்தில் இரு மொழி கொள்கை உள்ளது.
தி.மு.க. தேர்தல் வாக்குறுதி யில் கூறியதுபோல் மாநில கல்வி கொள்கையில் தமிழக அரசு உறுதியாக உள்ளது.
மாணவர்களுக்கு பயனுள்ள திட்டங்கள் தொடரும். பொதுத்தேர்வு எழுதும் மாணவ-மாணவிகள் பதற்றம் இன்றி தைரியமாக எழுத வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story