‘தினத்தந்தி’ புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
புகார் பெட்டி செய்தி எதிரொலி
தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டையை சேர்ந்தவர் ராமன். இவர், புதுக்கோட்டை-சாயர்புரம் மெயின் ரோட்டில் சிறுப்பாடு பயணிகள் நிழற்கூடையின் மேற்கூரை பெயர்ந்து இடிந்து விழும் நிலையில் இருப்பதாக “தினத்தந்தி” புகார் பெட்டிக்கு அனுப்பிய பதிவு செய்தியாக பிரசுரமானது. அதன் எதிரொலியாக பயணிகள் நிழற்கூடம் சீரமைக்கப்பட்டுள்ளது. கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த “தினத்தந்தி”க்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளார்.
குண்டும் குழியுமான சாலை
நெல்லையில் இருந்து சேரன்மாதேவி, முக்கூடல் செல்லும் சாலையில் அமைந்துள்ளது கல்லூர். இங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் இருந்து கல்லூர் பஸ்நிறுத்தம், மேலக்கல்லூர் ரெயில்வே கேட் வரை செல்லும் மெயின் ரோடு குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே, சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேணடும்.
டார்வின், சேரன்மாதேவி.
இடிந்து விழும் நிலையில் நன்மைக்கூடம்
நெல்லை மாவட்டம் ராதாபுரம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பாப்பான்குளம் கிராமத்தில் ஆதிதிராவிட சமுதாய மக்களுக்கான இடுகாடு நன்மைக்கூடம் கட்டப்பட்டு சுமார் 20 வருடங்களுக்கு மேல் ஆகிறது. தற்போது அந்த கட்டிடத்தின் உள்ளே சிமெண்டு பூச்சுகள் முழுவதுமாக பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகிறது. மழைக் காலத்தில் கட்டிடத்தின் உள்ளே தண்ணீர் ஒழுகுகிறது. இதனால் எந்த நேரத்திலும் நன்மைக்கூடம் இடிந்து விழும் நிலையில் உள்ளது. எனவே அதனை அகற்றிவிட்டு புதிய நன்மைக்கூடம் கட்டித்தருவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
இசக்கியப்பன், பாப்பான்குளம்.
பயணிகளுக்கு இடையூறு
தென்காசி புதிய பஸ்நிலையத்தில் இருந்து ராஜபாளையம், மதுரை மற்றும் கேரளாவுக்கு செல்லும் பஸ்கள் அதற்குரிய கவுன்ட்டர்களில் நிற்காமல் ஒன்றன் பின் ஒன்றாகவும், குறுக்காகவும் நிற்கின்றன. இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. மேலும் பயணிகள் ஒரு நடைமேடையில் இருந்து மற்றொரு நடைமேடைக்கு செல்வதற்கும் இடையூறாக உள்ளது. எனவே, அதற்குரிய கவுன்ட்டர்களில் பஸ்கள் நிற்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜெகதீசன் ஜான், பாவூர்சத்திரம்.
அங்கன்வாடி மையத்தில் வசதிகள் தேவை
தென்காசி மாவட்டம் ராயகிரி பேரூராட்சி 4-வது வார்டு ஆவுடையாபுரம் கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் போதிய அடிப்படை வசதிகள் இல்லை. மின்விசிறிகள் இல்லை. குழந்தைகள் ஓய்வு எடுக்க கிழிந்த பாய்கள், அழுக்கான தலையணைகள் மட்டுமே உள்ளது. விளையாட்டு பொருட்கள் மற்றும் நாற்காலிகள் பராமரிப்பு இல்லாமல் அறைக்குள் முடங்கி கிடக்கிறது. மேலும் இந்த மையத்திற்கு நடைபாதை வசதி இல்லாமல் மழை நேரத்தில் குழந்தைகள் இடுப்பளவு தண்ணீரில் நடந்து அங்கன்வாடிக்கு செல்கின்றனர். குடிதண்ணீர் குழாய் உள்ளது. ஆனால், அதில் தண்ணீர் வருவதில்லை. மேலும் அங்கன்வாடியை சுற்றிலும் புதர்கள் மண்டிக் கிடப்பதால் விஷஜந்துக்களின் நடமாட்டமும் உள்ளது. எனவே, அங்கன்வாடி மையத்துக்கு போதிய அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.
திருப்பதி செல்வம், ராயகிரி.
குவிந்து கிடக்கும் மரக்குவியல்கள்
கடையநல்லூர் தாலுகா வடகரை அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் 8 இடங்களில் மரக்கட்டைகள் குன்றென குவித்து வைக்கப்பட்டுள்ளன. இதனால் விஷஜந்துக்கள் ஒளிந்து கிடக்கும் அபாயம் இருப்பதால், ஆஸ்பத்திரிக்கு வரும் நோயாளிகளும் ஒருவித அச்சத்திலேய வருகின்றனர். எனவே, மரக்குவியல்களை அகற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
வாவா மைதீன், வடகரை.
புகாருக்கு உடனடி தீர்வு
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்தவர் நேதாஜி பாலமுருகன். இவர், முகமது சாலிகாபுரம் கிராமத்தில் இருந்து புதுக்கிராமத்துக்கு செல்லும் சாலை குண்டும் குழியுமாக கிடப்பதாக “தினத்தந்தி” புகார் பெட்டிக்கு அனுப்பிய பதிவு செய்தியாக பிரசுரமானது. அதற்கு உடனடி தீர்வாக புதிதாக சாலை அமைக்கப்பட்டுள்ளது. ேகாரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த “தினத்தந்தி”க்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளார்.
தார்சாலை அமைக்கப்படுமா?
ஸ்ரீவைகுண்டம் தாலுகா சேரகுளம் பஞ்சாயத்து மேல சிரியந்தூர் கிராமத்தில் பல வருடங்களாக சாலை அமைக்கப்படவில்லை. வெறுமனே மண் சாலையாகவே இருப்பதால் மழை நேரத்தில் சேறும் சகதியுமாக மாறி விடுகிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகிறர்கள். எனவே, அங்கு தார்சாலை அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்தையா மணி, மேல சிரியந்தூர்.
Related Tags :
Next Story