கட்டாய வசூலில் ஈடுபடும் மின்சார துறையினரால் பொதுமக்கள் அவதி
உடுமலை பகுதியில் கட்டாய வசூலில் ஈடுபடும் மின்சார துறையினரால் பொதுமக்கள், விவசாயிகள் மிகவும் அவதியடைந்துள்ளனர்.
தளி
உடுமலை பகுதியில் கட்டாய வசூலில் ஈடுபடும் மின்சார துறையினரால் பொதுமக்கள், விவசாயிகள் மிகவும் அவதியடைந்துள்ளனர்.
மின்சார துறையினர் கட்டாய வசூல்
அன்றாட அத்தியாவசிய தேவையில் முக்கியமானதும் முதன்மையானதாகவும் விளங்குவது மின்சாரம். மின்சாரத்தை மையமாகக் கொண்டு தொழில்நிறுவனங்கள், அலுவலகங்கள், இணையதளம், மின்சாதனங்கள் உள்ளிட்டவை இயங்கி வருகின்றன. மின்சாரம் இன்றி எந்த ஒரு சேவையையும் பொதுமக்கள் பெற முடியாது. இதனால் மின்சாரம் வாழ்வின் பிரித்துப் பார்க்க முடியாத ஒரு அங்கமாகவே மாறிவிட்டது.
ஆனால் மின்சாரத் துறையில் நடைபெற்று வருகின்ற குளறுபடிகள், முறைகேடுகள் காரணமாக குறித்த காலத்தில் சேவையை பெறமுடியாமல் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகி வருவது தொடர்கதையாக உள்ளது. அந்த வகையில் உடுமலை பகுதியில் சேவையை பெறுவதற்காக செல்கின்ற பொதுமக்கள், விவசாயிகளிடம் மின்சாரத்துறையினர் கட்டாய வசூலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-
அரசு அளித்து வருகின்ற எந்த ஒரு சேவையையும் அதற்கென நிர்ணயம் செய்யப்பட்டு உள்ள கட்டணத்தைச் செலுத்தி பெறும் சமஉரிமை அனைவருக்கும் உள்ளது. ஆனால் உடுமலை பகுதி மின்சார வாரியத்தில் நிலைமை தலைகீழாக உள்ளது. ஒவ்வொரு சேவையை பெறுவதற்காக அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தையும் செலுத்தி கூடுதலாக பணம் அளித்தால் மட்டுமே நிறைவேற்றி தரப்படுகிறது. இல்லை என்றால் சேவை மறுக்கப்படுவதுடன் சம்பந்தப்பட்ட பொதுமக்கள், விவசாயிகள் அலைக்கழிக்கப்பட்டு வருகின்றனர்.
ஒவ்வொரு சேவையை பெறுவதற்கும் கடைநிலை பணியாளர் முதல் உயர் அதிகாரி வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. அதன்படி வீடு, தொழிற்சாலை, விவசாய மின்இணைப்புகளில் பழைய வயர் மாற்றுதல் மற்றும் புதிதாக இணைப்பு தருதல், பீஸ் போடுதல், புதிதாக மின்மாற்றி அமைத்தல் மற்றும் பழுது ஏற்பட்டால் நீக்குதல், புதிதாக மின்கம்பங்கள் அமைத்தல் மற்றும் பழையதை மாற்றி அமைத்தல், புதிதாக விவசாய மின் இணைப்புக்கு பதிவு செய்தல் உள்ளிட்ட எந்த ஒரு பணிக்கும் கடைநிலை பணியாளர்களுக்கு பல நூறுகளும் அதிகாரிகள் பணி நிலைக்கு தகுந்தவாறு பல ஆயிரங்களும் பணம் கொடுக்க வேண்டி உள்ளது. பணம் தராத எந்த ஒரு சேவையையும் பொதுமக்கள், விவசாயிகள் பெற இயலாத சூழலே உள்ளது.
நடவடிக்கை
பல்வேறு இடர்பாடுகளுக்கு இடையில் விவசாயத்தில் ஏற்பட்டுள்ள இழப்பை ஈடுசெய்வதற்கே விவசாயிகள் நிராயுதபாணியாய் திணறி வரும் நிலையில் அரசு அளித்து வருகின்ற சேவையை நிர்ணயித்த கட்டணத்தைப் பெற்றுக்கொண்டு அளிப்பதற்கு அதிகாரிகள் முன்வருவதில்லை. உணவு உற்பத்திக்கு முன்னுரிமை அளிக்காமல் அதை தடைசெய்யும் சூழலை அதிகாரிகள் ஏற்படுத்தி வருவதால் விவசாயத் தொழில்நலிவடையும் சூழல் ஏற்பட்டு உள்ளது.
எனவே மாவட்ட நிர்வாகம் உடுமலை பகுதியில் ஆய்வு செய்து மின்சாரத்துறையில் நடைபெறுகின்ற குளறுபடிகளை நீக்குவதற்கும், முறைகேடுகளில் ஈடுபட்டு வருகின்ற அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதற்கும் முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story